பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கோட்டத்து மணியோசை வருவோரெல்லாம் வருக என்று அழைப்பதுபோல் ஒலித்துக் கொண்டிருந்தது. சயந்தி நகரை உதயணனுடைய அமைச்சர்களில் ஒருவனாகிய உருமண்ணுவா ஆண்டு வந்தான். சயந்தி நகரம் உதயணன் ஆட்சிக்கு உட்பட்டதாயின், அவன் ஆணையின்மேல் உருமண்ணுவா ஆண்டு வந்தான். சயந்தி நாற்புறமும் இயற்கை வளமிக்க மலைகள் சூழ்ந்த நகர். என்றும் குன்றாத எழில்வளமும் சார்ந்தது.

அந்த நகரத்திற்குள் தத்தை, காஞ்சனை, வயந்தகன், இடவகன் இவர்கள் புடைசூழ மிக்க விருப்பத்துடன் உதயணன் புகுந்தனன். படைகள் யாவும் புறநகரிலே தங்கி விட்டன. உதயணன் வரவு முன்பே ஒலைச் செய்தி மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததனால், நகரில் எங்கும் களிப்புடன் கூடிய ஆரவாரம் மிகுந்து காணப்பட்டது. பூரண விளக்கு, தோரண மாலைகளும் சுடரொளி விதானங்களுமாகப் பொலிவும் புதுமையும் பெற்று விளங்கின, நகரப்பெரு வீதிகள் யாவும். அவற்றை மகிழ்ச்சியுடன் நோக்கியவாறே இவர்கள் சென்றனர்.

22. சயந்தி நகரில் திருமணம்

திரவனுடைய வெம்மையை ஆற்றிச் சயந்தி நகருக்கு நிழலளிப்பவன்போல விரித்த பூங்கொடிகள் பல தோன்றின. பெரிய முரசங்களின் கடல் போன்ற ஒலிக்கு இடையே, குடமுழாக்களின் கிண்கிணி இசையும் ஒலித்தது. இருவினைப் பழந்துயர்களை வென்ற அருகதேவனுக்கு இந்திர உலகம் வரவேற்பளித்தது போல, உதயணன் தத்தை முதலியோரை மகளிரும் மைந்தருமாகக் கூடிச் சயந்தி நகரத்தினர் மங்கல நிறை குடங்களுடன் எதிர்கொண்டு வரவேற்றனர். இருள் கடிந்து தோன்றும் இளஞாயிறு போலத் துயர் கடிந்து பொலியும் தோன்றலே வருக என்றார் சிலர். சயந்தி நகரினர் தம் அன்பு நிறைவை எல்லாம் உதயணன் வரவேற்பில் காட்டினர்.