பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி


உஞ்சை நகரில் யூகி என்ன செய்தான் என்பதைக் காண்போம். உதயணனைப் பிடியில் ஏற்றி அனுப்பிய பின்பு யூகி, சாதகன் என்னும் குயவனின் குடிலில் சாங்கியத் தாயைச் சந்தித்து மேலே நிகழ்த்த வேண்டிய சில திட்டங்களைப் பற்றிச் சிந்தித்தான் என்பது முன்பே கூறப்பட்டுது. உதயணன் நலமாக வாசவதத்தையுடன் நகர் அடைந்திருப்பான் என்பது தெரியினும், இங்கே உஞ்சை நகரில் தன்னையும் உதயணனையும் தன்னோடு தொடர்புடைய மற்றவர்களையும் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளாதபடி சில பொய்ச் செய்திகளைப் பரப்பிவிட்டுப் பின்புதான் நகர் திரும்ப வேண்டுமென்று கருதினான் யூகி. மலையில் ஓரிடத்தில் ஒரு மரக் கிளையில் விளைந்த தேனும் நாட்டில் ஒரிடத்தில் ஒரு பசுவினிடம் கறந்த பாலும் வேறுவேறு இடங்களில் தோன்றிய பொருள்கள்தாம். ஆனால் அவை ஒன்றுபட்டாலும் பிரிந்திருந்தாலும் ஒரே இன்சுவை உடையவையாகவே இருக்கின்றன. யூகியைப் பொறுத்தவரையில் தனக்கும் உதயணனுக்கும் உள்ள நட்பை, அத்தகையதாகவே எண்ணியிருந்தான். அரசியல் தொடர்புள்ள செயல்களிலும் சூழ்ச்சியோடு கூடியவற்றை மாறுபடாமல் செய்து முடிப்பதிலும் முற்றித் தேர்ந்த யூகி, நட்புணர்ச்சியில் இவ்வளவு அருமையான பிணைப்பு உடையவன்.

பாழ்பட்டு இடிந்து, சில பகுதிகள் மட்டுமே எஞ்சி யிருந்த மாகாள வனத்துக் காளி கோயிலைத் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் மறைவான வாழ்விடமாகக் கொண்டிருந்த யூகி, மாறுவேடங் கொண்டு உஞ்சை நகரக் கோட்டை வாயிலுக்குள் சென்று நகரில் புகுந்தான். அங்கே பற்பல இடங்களில் பலரும் அறியும்படியாகத் தான் கூறக் கருதியிருந்த பொய்ச் செய்திகளைப் பரப்பினான். “பிரச்சோதன மன்னன், உண்மையான அன்பு பூண்டு உதயணனைத் தன் மகள் தத்தைக்கு யாழ் கற்பிக்கச் செய்தான். புதல்வர்களுக்கும் அவனைக்கொண்டு படைக்கலப் பயிற்சி அளித்தான். உதயணனை விரும்பி அவனுக்குத் தன் மகளை