பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யூகியின் பயணம்

111


மனமாற அளித்தே பிரச்சோதன மன்னன் இருவரையும் பிடியேற்றி அனுப்பினான். தத்தையும் உதயணன்மேல் மிக்க காதல்கொண்டே அவனுடன் சென்றனள். பிரச்சோதனன் வெகுண்டெழுந்து படையோடு உதயணனைப் பின்பற்றாதிருத்தலே இதற்குச் சான்று” என்று யூகி ஏற்ற காரணத்தோடு இணைய செய்திகளைப் பலரும் அறியப் பொதுஇடங்களில் எடுத்து உரைத்தான்.

‘பிரச்சோதனன், சாலங்காயனுடைய அறிவுரையாலும் தன் மனஅமைதியாலும் உதயணனைப் பற்றி அவ்வளவாகச் சினங் கொண்டிருக்கமாட்டான்’ என்ற முடிவு யூகிக்கு அப்போது நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவேதான் இந்தப் பொய்ச் செய்திகளைச் சில சிறிய உண்மைக் கலப்புடன் முற்றும் மெய்யேபோலப் பரப்புவதில் அவனுக்குத் தடைகள் எவையும் ஏற்படவில்லை. பொது மன்றங்கள், கோயில் முன்றில்கள், யானைச்சேரிகள், படைஞர்வீதிகள், பெருந்தெருக்கள் எங்கும் எவரும் அறியப் பரவிவிட்டது யூகியின் செய்தி, அங்கங்கே அறிந்த பலர், அறியாத சிலருக்குத் தாமே எடுத்துரைத்தனர். உஞ்சை நகரில் யூகி செய்ய வேண்டிய வேலை அநேகமாக நிறைவேறியது. அன்றிரவு மாகாள வனத்துக் காளிகோயில் அதுவரை காணாத பலரைக் கண்டது.

உஞ்சை நகருக்கு அப்பால் வெளியே அமைந்துள்ள பயங்கரமான அந்தக் காளிகோயிலின் சிதைந்துபோன சுவர்களுக்கு நடுவே பலர் கூடியிருந்தனர். இடிந்துபோன சுவர் ஒன்றின்மீது பெரிய தீவட்டி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. யூகி அவர்களுக்கு முன் நின்று மனம் உருகும் வகையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். தீவட்டியின் மங்கலான ஒளியில், கோவிலின் சிதையாமலிருந்த உட்புறத்தில் காளிதேவியின் பயங்கரமான பெரிய சிலை தெரிந்து கொண்டிருந்தது. ஏறக்குறையக் கற்பனை உயரம் அமைந்திருந்த பிரம்மாண்டமான அந்தக் காளிதேவியின் சிலைக்கு முன்னால் நின்றுதான் யூகி பேசிக் கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள் அதுவரை உஞ்சை நகரில் அவன் செய்த பல