பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி


சென்றது. நகர எல்லை முடிந்தது. கான்யாறுகளும் மணல் வெளிகளும் உயர்ந்த மலைச்சரிவுகளுமாகத் தோன்றிய புட்பக நகரத்திற்குச் செல்லும் வழியில் அவர்கள் இப்போது சென்று கொண்டிருந்தனர். நாட்டு வழியும் வளமிக்க காட்டு வழியுமாக மாறிமாறிப் பயணம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடையாற்றலற்ற, சிள்வண்டுகள் அரற்றும் காட்டுப் பாதையாகச் சில போதும், குறும்பர்கள் வாழும் வழியிற் சில போதுமாக வையம் சென்றது. புட்பக நகர எல்லைக்கு இப்பால் ஒரு சிற்றுாரில் சாங்கியத் தாயை இறக்கி வழி விவரங்களைத் தெளிவாகக் கூறிய யூகி, அவளை அங்கிருந்தே பிரிந்து செல்லுமாறு அனுப்பிவிட்டான். தான் மட்டும் தனியாக வையத்தில் பயணம் செய்தபடியே புட்பக நகரத்திற்கு நானுற்று நாற்பது எல்லைத் தொலைவிற் சென்று, எந்திர வண்டியை ஓரிடத்தில் ஒளிந்து வைத்துவிட்டு நடந்தே புட்பக நகருக்குள்ளே போனான். முதல் நாள் உஞ்சையிலிருந்து புறப்பட்ட அதே இருள் படரும் அந்தி மாலை நேரத்தில் இன்று புட்பகத்தின் கோட்டை வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அவன். அரண்மனைக்குள் தன்னை இன்னாரென்று கூறியனுப்பிய யூகியைக் காவலர்கள் திரும்பி வந்து மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.

24. நண்பர் சூழ்ச்சி

யூகியைக் கண்டதும் இடவகன் நட்புணர்ச்சியோடு தழுவிக் கொண்டான். வெகு நாட்களுக்குப்பின் இப்போது தான் யூகியும் இடவகனும் ஒருவரையொருவர் காண்கின்றனர். ஒருவருக்கொருவர் நலன் அறிந்தனர். யூகி உதயணன் நலத்தைக் கூறுமாறு இடவகனைக் கேட்டான். இடவகன் ‘உதயணன் நலம்’ என்று மறுமொழி கூறிப் பின்பு விவரமாக உரைப்பதாகச் சொல்லிவிட்டு, ‘உதயணனை யூகி எவ்வாறு உஞ்சையிலிருந்து மீட்டான்’ என்பதைத் தான் முதலில் அறிய விரும்புவதாகச் சொன்னான். இருவரும்