பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நண்பர் சூழ்ச்சி

117


உணவு முதலியவற்றை முடித்துக்கொண்டு காவல்மிக்க மந்திர மாடமொன்றை அடைந்து அங்கு அமர்ந்து உரையாடலாயினர்.

யூகி உஞ்சைக்குத் தான் சென்றபின் நிகழ்ந்த யாவற்றையும் தொகுத்து இடவகனுக்குக் கூறினான். யாவற்றையும் கேட்ட இடவகன், யூகியின் ஆழமான நட்புத் திறத்தைப் போற்றினான். உதயணன் மீட்சிக்காக யூகி ஏற்றிருக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பது அப்போதுதான் இடவகனுக்குப் புலப்பட்டது. உதயணன் தன் உயிரினுமினிய நண்பன் என்ற முறையில், அவனுக்கும் தனக்கும் அத்தகைய நண்பனேயாகிய யூகியை வாய்விட்டுப் பாராட்டினான் இடவகன். தன்னைப் பாராட்டும் இடவகனை இடைமறித்து, “அது இருக்கட்டும், உதயணனைப் பற்றி மேல்நிகழ்ச்சிகளை நான் அறிந்து கொள்ளல் வேண்டாமா? அதை இப்போது கூறு இடவகா” என்று வேண்டிக்கொண்டான் யூகி, இடவகன், உதயணன் உஞ்சையிலிருந்து புறப்பட்டது தொடங்கி, இடையே பிடி வீழ்ந்ததையும் சவரபுளிஞர் வளைத்துக் கொண்டதையும் வயந்தகன் தன்னிடம் வந்து தனக்குச் செய்தி கூறிப் படையுடன் தன்னைக் கூட்டிச் சென்று வேடர்களிடமிருந்து உதயணன் முதலியோரை மீட்டதையும், சயந்தி மலைச்சாரலில் தங்கிவிட்டுச் சயந்தி நகருக்குப் புறப்பட்டதையும் விவரித்துரைத்தான். இடவகன் அவ்வாறு கூறிக் கொண்டே வரும்பொழுது யூகிக்கு உதயணன்பாலுள்ள உயிர் நட்பை அறிந்து கொள்ளத்தக்க நிகழ்ச்சி ஒன்று அங்கே அப்போது நடந்தது.

உதயணன், தத்தை முதலியோர் தங்கியிருந்த இலவம் புதருக்கு வேடர்கள் நெருப்பிட்டு விட்டனர் என்று இடவகன் கூறிக்கொண்டே வரும்பொழுது, தன்னை மறந்த நிலையில் கேட்டுவந்த யூகி, ‘ஆ! அப்படியா? ஐயோ’ என்று கூறிக் கொண்டே அலறிமயங்கி வீழ்ந்துவிட்டான். உடனே இடவகன் தான் திடீரென்று அவ்வாறு கூறியதற்காகத் தன்னைக் கடிந்துகொண்டே குளிர்ந்த சந்தனங் கலந்த நீரை