பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கூடாது’ என்பன. இவற்றுள் ஒரு நிபந்தனையை உதயணன் கைவிட்டதால் யானை அவனை நீங்கிற்று. வழக்கம்போல யாழ் வாசிக்கும்போது யானை வராமை கண்டு கலங்கிய உதயணனுக்குத் தன் தவறு புரிந்தது. பல இடங்களிலும் வீரர்களை அனுப்பி யானையைத் தேடினான். கோடபதி என்னும் யாழும் கையுமாகக் காடுகளில் தானே தனியாக அதனைத் தேடி அலைவானாயினான். யானையின் பிரிவு அவனை ஒரு நிலை கொள்ளும்படி விடவில்லை.

இவ்வாறு உதயணன் காடுகளில் தனியே திரியும் செய்தி உச்சயினியைத் தலைநகராகக்கொண்டு அவந்தி நாட்டை ஆண்டு வந்த பிரச்சோதன மன்னனுக்கு எட்டியது. பிரச்சோதன மன்னனுக்கு வாசவதத்தை என்ற ஒரு பெண்ணும், பாலகன் முதலிய புதல்வர் மூவரும் இருந்தனர். யானை இலக்கணத்தில் குறைபாடு இல்லாத நளகிரி என்ற பட்டத்து யானை ஒன்றை அவன் பெற்றிருந்தான். தனக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை ஏனைய அரசர்களெல்லாம் மறவாது செலுத்தி வரும்போது உதயணன் மாத்திரம் செலுத்தாமையைத் தன் மந்திரி சாலங்காயன் மூலம் அறிந்த பிரச்சோதனன், உதயணன்பால் பெரும்பகை கொண்டிருந்தான். அவனைச் சிறைகொள்ள ஏற்ற சமயம் நோக்கி எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தான். அப்படி இருந்த பிரச்சோதனனுக்கு உதயணன் காடுகளில் தனியே திரியும் இந்த நிலை ஒரு நல்ல வாய்ப்பல்லவா? இந்த வாய்ப்பைத் தப்பாமல் பயன்படுத்திக்கொள்ள மந்திரியோடு கலந்தாலோசித்த பிரச்சோதனன் ஒரு தந்திரமான வேலையைச் செய்தான். உண்மை யானையைப் போல் தோன்றும்படி ஒரு எந்திர யானையை மரச்சட்டம், துணி, அரக்கு முதலியவற்றால் உருவாக்கினான். அந்த எந்திர யானைக்குள் பிரச்சோதனனுடைய வீரர்கள் ஆயுதங்களணிந்து ஒளிந்திருந்தனர். யானையின் உடலுக்குள்ளும் வேறு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. காட்டில் தனியே திரியும் உதயணனுக்கு யூகி உதவி செய்ய வருவதைத் தடுப்பதற்காக, முன்னேற்பாட்டுடன் வைசாலிக்