பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நண்பர் சூழ்ச்சி

119

இடவகனிடம் உதயணனைத் தன்நிலை உணரச் செய்வதற்காக என்னென்ன வழிகளைக் கையாளலாம் என்பது பற்றிச் சிறிது நேரம் பேசினான். அவ்வளவில் இருவரும் துயிலச் சென்றனர்.

மறுநாள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வெகு விரைவிலேயே, போன ஆள் சாங்கியத் தாயோடு திரும்பி வந்து விட்டான். சாங்கியத் தாயை மற்றவர்கள் இல்லாத ஒரு மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று, இடவகன் மூலமாகத் தான் கேள்வியுற்றவற்றை யூகி அவளுக்குக் கூறினான். அப்பால், உதயணனைச் சீர்திருத்துவதற்கும் அவள் துணையே அவனுக்கு வேண்டியிருந்தது. நல்ல வேளையாகச் சாங்கியத் தாய் சயந்தி நகரத்தை அடைவதற்குள்ளேயே அவளைக் கூட்டி வந்திருந்தான் போன ஆள். யூகியின் திட்டத்திற்கு அதுவும் ஓர் உதவியாயிற்று.

அவளுக்குத் தன் ஏற்பாடுகளையும் விளக்கலானான் யூகி. “இன்பத்தையே கதி என்று கொண்டு தன்னைச் சுற்றி இருக்கும் துன்பங்களையும் பொறுப்புக்களையும் மறந்து விட்ட உதயணனை, அந்த மயக்கத்திலிருந்து மீட்கவும் நாம் தான் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். உஞ்சையிலிருந்து தத்தையுடன் பிடியேறி வருவதற்கு அப்போது உதவினோம். இப்போது செய்ய வேண்டிய உதவியோ அதனினும் இன்றியமையாததாக இருக்கிறது. அந்த உதவியைச் செய்து நிறைவேற்ற எவ்வளவோ சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் வகுத்திருந்தோம். இப்போதும் சில சூழ்ச்சிகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டியிருக்கின்றன. உதயணனுக்குத் தாயாரைப்போன்ற வயது முறை உடைய நீங்கள், முன்போலவே இதற்கு உதவுதல் வேண்டும்” என்று கூறிய யூகி, தன் திட்டங்களையும் மேலே சொல்லலானான். “சயந்தி நகரத்திலுள்ள உதயணன், தத்தை முதலியோரை ஒருநாள் இலாவாண நகரையடுத்த மலைச்சாரலில் உள்ள சோலையில் உண்டாட்டு விழாக் கொண்டாடச் செய்யவேண்டும். தொடர்ந்து நிகழும் அவ்