பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உண்டாட்டு விழா நாள்களில் ஒருநாள், வாசவதத்தையை அவனிடமிருந்து பிரித்து அழைத்துச்சென்று அவள் தங்கியிருந்த படமாடக் கோவிலைத் தீக்கிரையாக்கி, அவள் இறந்து விட்டதாக உதயணன் கருதும்படி செய்யவேண்டும். அங்ஙனம் பிரித்து அழைத்துவந்த தத்தையை, என்னிடம் (யூகியிடம்) கொண்டுவந்து விட்டுவிடவேண்டும். அதற்குப் பின்னர் உஞ்சை நகரிலிருந்து வரும்வழியில் பசி மிகுதியால் அவலை உண்டு, அவல் விக்கி யூகியாகிய நான் இறந்து விட்டேன் என்று உதயணன் அறிவுமாறு அவனுக்கு ஒரு பொய்யைக் கூறவேண்டும். இவ்வளவு செயல்களையும் பிறழாமற் செய்து பெருமிதக் குறைவுபட்ட உதயணனை வருத்திப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டியது உங்கள் கடமை” என்று யூகி சாங்கியத் தாய்க்குச் சொன்னான். பின்னர் உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் முதலியோரையும் தன்பால் வரவழைத்து அவர்களுக்கும் தன் திட்டங்களைக் கூறி, அதன்படி உதயணனை நல்வழிக்குக் கொணர ஒத்துழைக்குமாறு வேண்டினான். அவர்கள் உவகையோடு உடன்பட்டனர். இறுதியாகச் சாங்கியத் தாய்க்குத் தன்னை எங்கே, எந் நேரத்தில், எப்படிச் சந்திக்கலாம், அடிக்கடி நடத்த வேண்டிய வேலைகளைப் பற்றி எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதையெல்லாம் யூகி தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தான்.

அடுத்த நாள், யூகி யாத்திரைக்காகக் கொண்டுவந்த அவலை உண்கையில் விக்கி இறந்து போனான் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. கையும் காலும் ஒட்ட வைத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட அந்தச் செய்தியை எல்லோரும் நம்புவதற்குரிய சூழ்நிலையை யூகியின் நண்பர்கள் உண்டாக்கியிருந்தனர். அந் நண்பர்கள் கூடியழுத காட்சியும் உளங்குமைந்து இரங்கிய நிலையும் செயற்கைச் செய்தியாகிய அதை, உண்மையாகக் காட்டின. யூகி தலைமறைவாக ஓரிடத்தில் வசித்து வந்தான். அவன் உடல்போல ஓருடலை யூகியின் பிணமென்று காட்டி, அதனைத் தீ மூட்ட விரும்பாது