பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோகமும் அசோகமும்

121

கங்கையில் நீர்ப்படை செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு திரிந்தனர் அவன் நண்பர். புட்பக நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலுமே இந்தச் செய்தி பரவியிருந்தது. சயந்தி நகருக்கு அதுவரை இச் செய்தி எட்டவில்லை. யூகி தான்வரும் போது வெகு அமைதியாக வந்திருந்ததனால் அவன் உயிரோடு வந்து இருப்பதாக யாரும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதற்குள் சாங்கியத் தாய் சயந்தி நகருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தாள். யூகியின் திறமையும் சூழ்ச்சியும் மிக்க திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, கடமை எல்லாம் அவளைச் சார்ந்திருந்தன. வயந்தகன் முதலியோர் அதற்கு வெறும் உறுதியாளர்கள்தாம். உதயணன் நலனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தன்னைக் கொன்று கொள்ளத் துணிந்திருந்த யூகியின் தியாகம், வேடிக்கை நிறைந்ததாகவும் அதே சமயம் நட்பின் உயிர் இயைபுக்கு விளக்கமாகவும் தோன்றியது அவளுக்கு. வழி முழுவதும் இதே சிந்தனைதான். சயந்தி நகரை அடைந்த அவள், மீண்டும் ஒருமுறை தான் செய்ய வேண்டியவற்றை வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள். சயந்தி நகரத்து அரண்மனையை அடைந்த சாங்கியத் தாய் அங்கே உதயணனைச் சந்தித்தாள். தாயைக் கண்ட கன்றுபோல அவளை வரவேற்றான் உதயணன். இருவரும் முகமன் கூறிக் கொண்டபின் சித்திரகம்மத்தில் ஒர் இருக்கை தந்து, அதில் அவளை அமரச் செய்து எதிரே தானும் அமர்ந்து கொண்டான் உதயணன்.

25. சோகமும் அசோகமும்

ஞ்சை நகரத்து நதிக்கரையிலிருந்து பத்திராபதியில் உதயணன் தத்தை முதலியவர்களுடன் ஏறிப் புறப்பட்டபின் நிகழ்ந்தவற்றை அவனிடம் கேட்டறிந்தாள் சாங்கியத் தாய். அவற்றோடு உதயணன் சந்திப்பை முடித்துக்கொண்டு தத்தையைக் காணச் செல்லலாம் என்று எழுந்த அவளை, உதயணன் கேட்ட அந்தக் கேள்வி திகைக்கச் செய்துவிட்டது.