பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

யூகி, வயந்தகன், இடவகன், உருமண்ணுவா என்ற நான்கு நண்பர்களையும் நான்கு கண்களாக உருவகப்படுத்தி, மேற்கண்ணாகிய யூகி அழிந்து போனதற்கு அறிகுறியாக அக் கண்ணை ஒளி மழுங்கிப் போனதாக அமைத்து, உதயணனிடம் அப் படத்தைக் காட்டுமாறு சாங்கியத் தாயிடம் கொடுத்து அனுப்பினான். படத்தைக் கண்டவுடன் குறிப்பைத் தெரிந்துகொண்டு உதயணன் வினாவினால் செய்தியைச் சொல்லிவிடுமாறும் சாங்கியத் தாய்க்குக் கூறினான். அவள் அந்தப் படத்தைப் பெற்றுக்கொண்டு சயந்தி நகர் சென்றாள். சாங்கியத்தாய் படத்தோடு நகர அரண்மனையை அடைந்தாள். உதயணனும் வாசவதத்தையும் ஒருங்கே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் படத்தை உதயணனிடம் அளித்துக் காணும்படி வேண்டிக் கொண்டாள். ஒவியக்கலை நுட்பங்களை நன்கு உணர்ந்தவனாகிய உதயணன் படத்தை எழுதியவன் செய்திருக்கும் உருவகங்களையும் மேற்கண் ஒளி மழுங்கி இருந்த குறிப்பால் தோன்றும் செய்தியையும் புரிந்துகொண்டான். யுகிக்கு ஏதோ துன்பம் நேர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே துயரப்பொறை அவன் உள்ளத்தை அழுத்தியது! ஒன்றும் புரியாமல் கையில் அந்த ஒவியத்துடன் அப்படியே மலைத்துப்போய் உட்கார்ந்து விட்டான் உதயணன். அப்போது யூகியின் ஓவியக் குறிப்பை உதயணன் ஒரளவு அறிந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி எதிரே அமர்ந்திருந்த சாங்கியத் தாய்க்குத் தெரிந்தது. உடனே அவள், “யூகி உஞ்சையிலிருந்து வரும் வழியில், அவல் விக்கி இறந்து போனான்” என்று கூறிவிட்டாள். அதைக் கேட்ட அக்கணத்தில் இயக்கும் பொறி இழந்த எந்திரப் பாவை போலச் சோர்ந்து கீழே வீழ்ந்தான் உதயணன். வாசவதத்தையும் அச்செய்தி கேட்டுத் துடிதுடித்தாள். முதல் நாள் எல்லாத் திட்டங்களையும் கேட்டிருந்தும் இப்போது பெண்மைக்குரிய பேதைமையால் இப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அவள் அழுவதைக் கண்ட சாங்கியத் தாய் கள்ளமற்ற அவள் உள்ள நிலையை விளங்கிக் கொண்டாள். நண்பர்கள்