பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோகமும் அசோகமும்

127

உண்டாட்டு விழாவிற்கு உதயணன் உடன்பட்டால், யூகியின் இரண்டாவது சூழ்ச்சியாகிய வாசவதத்தையை உதயணனிடமிருந்து பிரிக்கும் செயலும் அந்த விழாவிலேயே எளிதில் முடியுமென்று நண்பர்கள் மகிழ்ந்தனர். விழாவிற்குத் தேவையான நுகர் பொருள்களைச் சேகரித்தார்கள். விழாச் செய்தி அறிந்த நகர மக்கள் களிப்பில் ஆழ்ந்தனர். இயற்கை அழகு இலாவாண நகரமலைச் சாரலுக்கே தனி உரிமை உடையது என்று சொல்லும் படியாக இருக்கும் அதன் நிகரற்ற வனப்பு.

இலாவாணத்தின் சாரலிலே இனிய நீர்ச்சுனைகளும் கலகலவென்ற ஒலி பரப்பிப்பாயும் கான்யாறுகளும் சோவென்ற பேரொலியும் கறங்கி வீழும் அருவிகளும் நிறைந்திருக்கும். புகுந்தவர் திரும்ப விரும்பாத பேரெழில் வளம்படைத்தது அது. பலவகை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப் பசுமை கொழிக்கும் நறுமண மிக்க ஒருவகைக் கத்துரி விளையும் தகர மரம் என்னும் விருட்சங்கள் எங்கும் நாசிக்கு மண விருந்து நல்கும். அந்த மலைச்சாரலில் தக்க முனிவர் வாழும் தாபதப் பள்ளியும் கற்றோர் வாழும் கடவுட் கோட்டங்களும் எங்கும் நிறைய உண்டு.

இத்தகைய பெரு வனப்பு வாய்ந்த இலாவான மலைச் சாரலில் சயந்திநகரப் பெருமக்கள் கூடிக் குழுமினர். தேரும் வையமும் சிவிகையும் வண்டியும் ஆகிய பலவகை ஊர்திகளில் ஏறி வந்திருந்தனர் அவர்கள். நகர், மக்களை முற்றிலும் இழந்து தனிமையுற்றது என்னும்படியாக அவ்வளவு மக்களும் மகளிரும் மைந்தருமாக மலைச்சாரலுக்கு வந்திருந்தனர் என்றால் அது மிகையாகாது. பாடி வீடுகள் பல அமைக்கப்பெற்றன. மலைச்சாரலில் உள்ள சோலைகள் தோறும் அங்கங்கே பல வெண்ணிறத் துணிகளில் அமைத்த பாடி வீடுகள் முழுநிலவு போலத் தோன்றின.

சுனையிலுள்ள குவளை மலர்களைக் கொய்து மகிழ்ந்தனர் சில மகளிர். தத்தம் கை விரல்களைச் செம்மை நிறத்தால் தோல்வியுறச் செய்வனபோல முறுக்கேறிச் சிவந்திருந்த காந்தள் மொட்டுக்களைப் பறித்து அழகு