பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோகமும் அசோகமும்

129

லிருந்து நழுவிக் காலடியில் வீழ்ந்தது. அவன் பசுமையான மரத்தின் அடியில் இருப்பதையும் மலர் வீழ்வதையும் உற்று நோக்கித் தமக்குள் ஏதோ முடிவு செய்தவர் போலக் காணப்பட்டார் முனிவர். முனிவர் என்ன கூறப் போகிறார் என்று எதிர்பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்தான் உதயணன். யூகியைப் பற்றி அவர் கூறும் செய்தி நலம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதே அவனுடைய மனத்தினுள் இருந்த ஒரே எண்ணமாகும். அவன் மனக் கருத்தையும் முகக் குறிப்பையும் பிறவற்றையும் ஊடுருவித் தெரிந்து கொண்ட பின் முனிவர் அவனிடம் கூறத் தொடங்கினார்.

நீ இப்பொழுது பசுமரம் ஒன்றை அடைத்து அதன் அடியில் வீற்றிருக்கிறாய். ஆகையால் உன்னோடு உயிர் நட்புப் பூண்ட ஒருவன் கருதுவதுபோல் இறந்துவிடவில்லை. உண்மையில் அவன் உயிரோடு இருக்கிறான். ஆனாலும் வேறோர் துயர் இப்போது உனக்கு நேர இருக்கிறது. உன் கையிலிருந்த வெண்மலர் நழுவிக் கீழே விழுந்ததால் உனக்கு அளவற்ற இன்பமளித்துவரும் ஒரு பொருள் உன்னிடமிருந்து விலகி மறைந்துவிடும். மலர் உன் காலடியிலேயே வீழ்ந்திருத்தலினால் அதை நீ எடுத்துக்கொள்ளவும் முடியும். அது போல இழந்த அந்தப் பொருள்களையும் பின்பு நீ விரைவில் அடைந்து விடலாம். நின் ஆட்சிக்குரிய தலைநகரையடைந்து பேரரசனாக வாழும் ஆட்சிப்பேறு உன்னை நோக்கி விரைவில் வந்துசேரும்" என்று அந்த முனிவர் உதயணனுக்கு விவரமாகச் சொன்னார். சாரணர் தரும உபதேசத்தையும் அவனுக்கு உள்ள வாழ்நாள் அளவையும் அதற்குள் அவனடையக்கூடிய பேறுகளையும் மேலும் அந்த முனிவர் அவனுக்குக் கூறினார். அவற்றை எல்லாம் கேட்ட உதயணன் யூகியை அப்போதே உயிருடன் காணமுடிந்ததுபோல மகிழ்ந்தான். முனிவரைப் பாராட்டிக் கொண்டாடி அவருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்தான். யூகியைப் பற்றியும் ஏனைய செய்திகளைப் பற்றியும் தனக்கிருந்த மனக் கவலையின் சுமை, முனிவர் கூற்றுக்குப் பிறகு கழிந்து போனது போன்ற உணர்வு அப்போது அவனுக்கு ஏற்பட்டது.

வெ.மு- 9