பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26. விரிசிகையின் பேதைமை

ப்போது உதயணன் அமர்ந்த இடத்தருகில் உள்ள அந்த ஆசிரமத்தில் கோப்பெருந்தேவியுடன் அரசாட்சியைத் துறந்து முதுபருவத்தினனான ஓர் அரசனும் அவன் தேவியும் தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு விரிசிகை என்னும் பெயருடன் கூடிய அழகு மிக்க மகள் ஒருத்தி உண்டு. விரிசிகை கன்னிப் பருவத்தினள். அவளும் தன் பெற்றோருடன் அதே ஆசிரமத்தில் வசித்து வந்தாள். இயற்கை வனப்புள்ள அந்த மலைச் சாரலில் வளர்ந்ததனால் விரிசிகை கள்ளங் கபடமற்ற தூய உள்ளமுடையவளாக இருந்தாள். ஆசிரமத்திலுள்ள பூஞ்செடிகளின்மீது அவளுக்குக் கொள்ளை அன்பு. அவைகளில் பூக்கும் மலர்களைக் கண்டு மகிழ்வதிலும் கொய்வதிலும் விரிசிகைக்குத் தனி இன்பம்.

இயற்கையின் நடுவிலேயே பிறந்து வளர்ந்ததனாலோ என்னவோ அங்குள்ள இயற்கைக் காட்சிகளின் ஒவ்வோர் வனப்பும் அவரிடமும் பூரணமாகக் காணப்பட்டன. தவ ஒழுக்கமுடைய ஆடவர்களை ஒழிய வேறு ஆடவர்களையோ இளைஞர்களையோ அதுவரை அவள் தன்முன் அங்கே கண்டதே இல்லை. ஆசிரமத்திற்குரிய சோலையில் மாலை தொடுக்க ஏற்ற பலவகை மலர்களையும் தழைகளையும் முற்றிய அரும்புகளையும் கொய்து வரலாம் என்ற கருத்துடன் அன்று அங்கு வந்த விரிசிகை, அசோக மரத்தடியில் அழகே வடிவாக அமர்ந்திருக்கும் உதயணனைக் கண்டாள். இப்போது வயந்தகன்கூட அவனுடன் இல்லை. எங்கோ பக்கத்திற்குச் சென்றிருந்தான். ‘காமன் காமன் என்று எல்லோரும் அழகிற் சிறந்தவனாகக் குறிப்பிடுகின்றார்களே? அது இதோ அமர்ந்திருக்கும் இந்த நம்பிதானோ?’ என்று விரிசிகை நினைத்தாள். அவன் மேல் இன்னதென்று புரியாத ஒரு விதமான பற்று அவளையறியாமலே அவளுக்கு ஏற்பட்டது. எல்லோரும் அறிந்த மொழியில் கூறினால் மையல் என்று அதற்குப் பெயர்.