பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கையிலிருந்த பவழத்தினாலாகிய பாவை பந்து முதலியன விளையாடற் கருவிகளை ஓரிடத்தில் வைத்து விட்டுச் சோலை சென்று, போதும் மலரும் பூந்தழையுமாக விரிசிகை விரைவிற் கொய்யத் தொடங்கினாள். கொய்து முடிந்தபின் கொய்த மலர்களை இரண்டு உள்ளங்கைகள் நிறைய ஏந்திக்கொண்டு நேரே உதயணனிடம் வந்தாள். காலடி யோசை கேட்டுத் தலை நிமிர்ந்தான் உதயணன். எதிரே திருமகள்போல நின்று கொண்டிருந்தாள் விரிசிகை, அப்போது அவள், அவனைப் பார்த்த மிரண்ட விழிநோக்கின் மருட்சியிலும் ஒரு தனி அழகு நிழலிட்டது. “நானும் என் பாவையும் சூடிக்கொள்ள மாலை வேண்டும். இவைகளை மாலையாகத் தொடுத்துக் கொடுங்கள்.” தேனினும் இனிய குரலில் இவ்வாறு கூறிக்கொண்டே, உள்ளங்கைகள் நிறைய இருந்த மலரையும் அரும்பையும் தழைகளையும் விரிசிகை அவனுக்கு முன்னே குவித்தாள். உதயணனுக்கு ஒரே வியப்பாயிருந்தது. ‘நாணமும் பயமுமில்லாமல் ஓர் ஆண் மகனிடம் வந்து, ‘எனக்குப் பூதொடுத்துக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்கிற பெண்ணும் இருக்க முடியுமா?’ என்று இந்த நிலையை வியந்தான் அவன்.

மலரை எடுத்து, அவள் கொடுத்த நார்ச் சுருளை வாங்கி மாலை கட்டத் தொடங்கியபோது, அவள் அணிவதற்காக என்று அந்த மாலையை உருவாக்குகிறோம் என்ற இன்ப உணர்வு உதயணனுக்கு ஏற்பட்டது. மாலை மிக அழகாகவும் அமைந்தது. பாவைக்காகத் தனியே சிறிய மாலை ஒன்றும் அவன் தொடுத்திருந்தான். அவன் கைகள் விரைவாக மாலை தொடுப்பதைப் பார்த்து விரிசிகை வியந்து கொண்டிருந்தாள். அப்படித் தன்னை நோக்கிக் கொண்டிருந்த அவளை நன்றாகப் பார்த்து, அவள் ஒர் அரசகுமாரி போலத் தோன்றுவதையும் பிற இலட்சணங்களையும் கொண்டு அரசர் குடிப் பிறந்தவள் என்றே தேர்ந்தான் உதயணன். மாலைகளைத் தன் மேலாடையிலிருந்து எடுத்துப் புன்முறுவலுடன் விரிசிகை கையில் அளித்தான். மாலைகளைப் பெற்றுக் கொண்ட விரிசிகை, அவற்றை அணிந்துகொள்ள அறியாமல் பூக்கள்