பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விரிசிகையின் பேதைமை

133

உதிரும்படி சிதைப்பது கண்டு, அவளுக்கு மாலை அணிந்து காட்ட விரும்பினான் உதயணன். அவளைத் தன் பக்கத்தில் அழைத்து மடிமேல் இருத்தி, நீண்ட கூந்தலில் வட்ட வடிவமாக அந்த மாலையைச் சூட்டி அழகு செய்தபின் “மெல்ல செல்க” என்று கூறி அவளை அனுப்பினான். கள்ளமற்ற அந்தக் கன்னிப் பெண்ணும் அவன் மடியில் அமர்ந்ததனால் புதிய களிப்பு மிக்கதொரு உணர்வைப் பெற்றது போலிருந்தது. கொடிபோல வளர்ந்து பரவ வனப்பு நிறைந்து விளங்கிய விரிசிகை, மலைப் பகுதியில் வசிப்போர் அணியும் எளிய சிறிய உடையே அணிந்திருந்தாள். பருவ வளம் ஒவ்வோர் அங்கங்களிலும் பொலிவுற்றுத் தோன்றிய அவளை மடியில் இருத்திக் கொண்டிருந்த அந்தச் சிறுபொழுது, உதயணனுக்கு மறக்க முடியாதபடி நினைவில் நின்றுவிட்டது.

உதயணன் தன் மடியிலிருந்து விரிசிகையை எழச் சொல்லிய அதே நேரத்தில், காஞ்சனை பின்தொடரப் பல நிறப் பூக்களைக் கொய்துகொண்டு அங்கே வந்து சேர்ந்தாள் வாசவதத்தை. உதயணன் மடியில் அழகான இளம் பெண் ஒருத்தி கூந்தலில் மாலை சூடிய வண்ணம் அமர்ந்திருந்து விட்டு எழுவதைக் கண்ட தத்தைக்கு ஒரு விநாடி உள்ளமே துடிப்பற்று நின்றுவிடும் போலிருந்தது. யார் யாரோ வருவதைக் கண்ட விரிசிகை ஒன்றும் புரியாது எழுந்து பயந்துகொண்டே ஆசிரமத்தின் உள்ளே ஓடிவிட்டாள். தத்தை கண்கள் சிவக்க உதடுகள் துடிதுடிக்கச் சினத்துடன் உதயணனை நெருங்கினாள்.

பக்கத்திலிருந்த காஞ்சனமாலையிடம் தத்தை சீற்றத்தோடு கூறிய சொற்கள் உதயணன் காதில் விழுந்தன. “காஞ்சனை என்னை இப்போதே என் தந்தையின் நகருக்குக் கொண்டு போய் விட்டுவிடச் சொல்! தனக்கு மிகப் பக்கத்தில் உள்ள தாமரைப் பொய்கையிற் பொழுதோடு மலர்ந்து புதுமைச் செவ்வியோடு விளங்கும் தாமரை மலரிலுள்ள தேனை உண்ணாது, தொலைவிலிருக்கும் நெய்தற் பூவில் தேனுண்ண விரும்பி அதனை நாடிச் செல்லும் வண்டு