பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் நாடிய சூழ்ச்சிகள்

135

என்று அவனுக்குத் தோன்றவில்லை. அப்போது தத்தையின் ஊடல் தானாகத் தணிவதற்கு ஏற்ற நிகழ்ச்சி ஒன்று தற்செயலாக நடந்தது. மலைச்சாரலில் இருந்த வளர்த்தியான மரமொன்றிலிருந்து ஒரு பெரிய குரங்கு திடீரென்று அங்கே தத்தையின் அருகில் குதித்து வந்தது. காண்பதற்கு அஞ்சத் தக்க தோற்றமுடைய அக் குரங்கு திடுதிப் பென்று குதித்தது கண்டு பயந்து நடுங்கிய தத்தை, தன் ஊடலை மறந்து உதயணனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அச்சத்தினால் ஏற்பட்ட இந்தத் தழுவுதலினால் உதயணன்மேல் தான் கொண்ட சினத்தையும் ஊடலையும் தத்தை மறந்துவிட்டாள்.

தத்தையின் எழிலும் இன்பமுமே உதயணனை அரசியலையும் தன் ஆண்மையையும் இழக்கச் செய்திருந்தன என்பதை நன்கு உணர்ந்திருந்த உதயணனுடைய உயிர்த் தோழர்கள், ஏற்கனவே யூகி இட்டிருந்த திட்டப்படி அவளை அவனிடமிருந்து பிரித்து, யூகியின் ஆதரவில் சில காலம் மறைவாகத் தங்கியிருக்கும்படி செய்யக் கருதினர். உண்டாட்டு விழா ஒருவாறு முடிவுற்றது. மக்கள் நகர் மீண்டனர். உதயணனையும் தத்தையையும் மலைச்சாரலுக்குப் பக்கத்தில் உள்ள இலாவாண நகரத்து அரண்மனையில் சில நாள் தங்கி வாழும்படி ஏற்பாடு செய்திருந்தனர். தன் திட்டம் நிறைவேற யூகி அந்த ஏற்பாட்டை நண்பர்கள் மூலமாகச் செய்வித்திருந்தான்.

27. நலம் நாடிய சூழ்ச்சிகள்

ற்பாட்டின்படி வாசவதத்தையும் உதயணனும் இலாவாண நகரத்து அரண்மனையில் தங்கி வாழ்ந்து வந்தனர். அங்ஙனம் அவர்கள் வாழ்ந்து வரும்போது ஒருநாள், “இப்படி முயற்சியின்றி வீணே இருந்துவருதல் அரசர்குடிப் பிறந்தோர்க்கு அழகன்று. ஆகையால் நீ உன் கீழுள்ள குறுநில மன்னர்களையும் பிறரையும் கண்டு, அவர்கள் செவ்வனே ஆட்சி நடத்துகின்றனரா என்று கவனிக்கப் போய் வருதல் வேண்டும்” என நண்பர் அவனுக்குக் கூறினர். உதயணன்,