பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கைதியாகச் சென்றான். அரசன் பிரச்சோதனனின் ஆணைப்படி அங்கே ஓர் இருட்சிறையில் உதயணன் அடைக்கப்பட்டான். வயந்தகன் மூலமாக உதயணன் நிலையறிந்த யூகி பெருஞ்சினங்கொண்டான். சீறியெழுந்த யூகியின் சினம் ஒரு சபதமாக வெளிப்பட்டது. "தன் போலி யானையால் எங்கள் உதயணனை அகப்படுத்திய பிரச்சோதன நகரை ஓர் உண்மை யானையாலேயே அழிப்பேன். உஞ்சை நகரத்தை நெருப்பில் ஆழ்த்திவிட்டு உதயணனை மீட்பேன். உதயணனைக் கொண்டே அந்த வஞ்சக மன்னன் மகள் வாசவதத்தையை வலிந்து இங்கே கொண்டுவரச் செய்து அவனுக்கே மணம் முடிப்பேன்" என்று யூகி சபதம் செய்தான். பிறகு யூகி உதயணன் பிரிவைப் பொறுக்காமல் தான் இறந்து போயினதாக ஒரு பொய்ச் செய்தியை எங்கும் பரப்பினான். வைசாலிநகரத்தைப் பாதுகாக்கத் தன் ஆட்களில் சிலரையும், கௌசாம்பி நகரத்தைப் பாதுகாக்கப் பிங்கல கடகர்களையும் ஏற்பாடு செய்தான். தான் இறந்துவிட்டதாகக் கிளப்பிய பொய்யை யாவரும் நம்புவதற்காகத் தன்னைப்போல் வேடமிட்ட ஒருவனை எரித்து, அவன் பிணத்தின் எரிந்த கோலத்தைச் சுடுகாட்டிலிட்டு எல்லோரும் காணச்செய்தான். எல்லோரும் யூகி இறந்துவிட்டான் என்றே நம்பி வருந்தினார்கள். யூகி தன் தோழர்கள் சிலருடன் உஞ்சை நகரத்தை அடைந்தான். தன் தோழர்களில் பலரை மாறு வேடத்துடன் பிரச்சோதனனுடைய அரண்மனையில் வேலை பார்த்து வரும்படி ஏற்பாடு செய்தான். அவர்களுக்குத் தான் செய்திருக்கும் ஏற்பாடுகளை விவரித்திருந்தான். உஞ்சை நகரத்தின் புறத்தேயிருந்த ஆள்நடமாட்டமற்ற காளிகோவில் ஒன்றில் யூகி வசித்து வந்தான். அவனுடைய திட்டங்களும் தனிமையான சிந்தனையில் அங்கேதான் உருவாயின.


யூகி இறந்தான் என்பதைக் கேட்ட பிரச்சோதனனும் அதனை உண்மை என்று நம்பி வைசாலிக்கு அனுப்பிய தன் படையை மீண்டும் வரும்படி கட்டளையிட்டான். இனிமேல் தன்னை ஏன் என்று கேட்பாரில்லை என்ற இறுமாப்பில்