பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பிசைந்துகொண்டு கவலை தோன்ற நிற்பதையும் கண்டான். அடுத்த கணம் வாசவதத்தைக்கு என்ன நேர்ந்ததோ என்ற திகைப்பில் குதிரையிலிருந்தே மயங்கிச் சாய்ந்தது அவன் உடல், வயந்தகனும் உருமண்ணுவாவும் பதறி ஓடி தரையில் விழ இருந்த உதயணனுடலைக் குதிரையிலிருந்தே தாங்கியவாறு எடுத்தனர். உடனே பக்கத்திலிருந்த ஏவலாளன் ஒருவன் ஓடோடியும் சென்று மயக்கத்தை நீக்கும் தன்மை வாய்ந்த கடுங்கூட்டு என்னும் அரிய மருந்தைக் கொண்டு வந்தான். அந்த மருந்தை அளித்து மார்பிற் குளிர்ந்த சந்தனத்தையும் பூசினர். பின் பெரிய ஆலவட்டம் ஒன்றைக் கொணர்ந்து தூயகாற்று அவன் உடலிற் படும்படியாக வீசினர். சிறிது நேரத்தில், “வாசவதத்தை என் உயிரே, நீ எங்குற்றனை?” என்று அரற்றிக் கொண்டே கனவிலிருந்து விழிப்பவன் போலக் கண்விழித்தான் உதயணன். சுற்றியிருந்த நண்பர்கள் சற்றே முகம் மலர்ந்தனர். மெல்ல மயக்கம் தெளிந்தான் அரசன். விழித்தவுடன், “வாசவ தத்தைக்கு என்ன நேர்ந்தது?” என்ற கேள்விதான் அவனிடமிருந்து துயரம் தோய்ந்து ஒலித்தது. வாசவத்தைக்கு நேர்ந்ததை அவனிடம் எப்படி விவரிப்பதென நண்பர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தயங்கினர்.

28. துயர வெள்ளம்

ண்பர்கள் நீண்ட நேரச் சிந்தனைக்குப்பின் நடந்த துன்பங்களைப் படிப்படியாக உதயணனுக்குக் கூறினார். வாசவதத்தைக்கு நேர்ந்த அவலம் அறிந்ததும் உதயணன் ஒரேயடியாகக் கதறினான். ஆருயிர் நண்பர் ஆறுதல் மொழி கூறினர். அதையும் பொருட்படுத்தாமல் எரிந்துகொண்டிருந்த அரண்மனையின் அந்தப்புர மாடங்களின் தீயிடையே தானும் குதித்து விடுவான்போல எழுந்து ஓடினான் உதயணன். “தத்தை இறந்தது இந்தத் தீயிலேதானே? நானும் இதிலேயே மூழ்கி இறக்கிறேன்” என்று கூறிக் கொண்டே ஒடிய அவனை நண்பர் தடுத்து நிறுத்துவதற்குப் பெரும்பாடுபட வேண்டி