பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

தானும் தீயிற் புகுந்து உயிர்விடும் எண்ணத்தைக் கை விட்டான். 'சுற்றித் தீப்பற்றியபோது அஞ்சி நடுங்கிச் செய்வதறியாது குகையில் சிக்கிவிட்ட மயிலைப்போலத் தன் இன்னுயிராகிய என்னை நினைந்து தத்தை எப்படிப் பரி தவித்தாளோ' என்று நினைத்துப் பார்த்தபோது உதயணனுக்குத் தன் உடலில் உயிர்ப்பே நின்றுவிடும் போலிருந்தது. அவலத்தின் உணர்வுச் சுமைகள் அவன் நெஞ்சைப் பிடித்துத் தாழ்த்தின. பறி கொடுக்கக் கூடாததும் என்றும் பறிகொடுப்பதற்கு அரியதுமான ஒன்றைப் பறி கொடுத்துவிட்டவன் போல மயங்கிச் சோர்ந்தான் உதயணன். எரிந்து போன தத்தையின் பொன்னுடலையாவது ஒரு முறை கண்குளிரக் காண வேண்டும் போலிருந்தது அவனுக்கு. கண்டால்தான் தன்னிடம் கொந்தளிக்கும் சோகவெள்ளம் வடியும் என்று அவன் உள் உணர்வு பேசிற்று. “அரை குறையாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை அவித்துவிட்டு எரிந்துபோன அவள் பொன்னுடலையாவது எனக்குக் காட்டுங்கள்” என்று உதயணன் கேட்டபோது நண்பர்களுக்குப் பகீரென்றது.

தத்தையின் பிணத்தைக் காணவேண்டும் என்று உதயணன் கேட்பான் என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நெருக்கடியான நிலை ஏற்பட்டது அவர்களுக்கு. இப்பொழுது அவன் கேட்ட கேள்வியால் தங்கள் குட்டு உடைபட்டு நாடகம் அம்பலமாகி விடுமோ என்று அவர்கள் உள்ளுற நடுக்கமும் அடைந்தார்கள். எல்லாம் உதயணன் நன்மைக்காகவே செய்திருந்தார்கள். என்றாலும் பொய் பொய்தானே? ‘எரிந்துபோன கரிப்பிணத்தை அரசர்கள் காண்பது வழக்கமில்லை. அது அவர்கள் மங்கலத்திற்குத் தகாது’ என்று தங்களைச் சமாளித்துக்கொண்டு ஒரு பொய்யைச் சாமர்த்தியமும் சாதுரியமும் தோன்ற வெளியிட்டு உதயணனை நம்ப வைத்தார்கள். முதலில் அதற்கு இணங்கிய உதயணன் பின்பு மனம் மாறிவிட்டான். கண்டிப்பாக எரிந்துபோன தத்தையின் உடலைக் காணத்தான் வேண்டுமென்று பிடிவாதத்தோடு ஒற்றைக் காலில் நின்றான்.