பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துயர வெள்ளம்

143

அவனுடைய பிடிவாதத்தைத் தளர்த்துவது கடினமாயிருக்குமெனத் தோன்றியது.

உதயணன் துயரத்தையும் அந்தத் துயர வேகத்தில் நொடிக்கு நொடி அதிகமாகி வரும் அவனுடைய பிடிவாதத்தையும் கவனித்த உருமண்ணுவா, அதைத் தீர்க்கும் வழி நாடிச் சற்றே நுணுக்கமாகச் சிந்தித்துப் பார்த்தான். இந்த நிலையில் உதயணனுடைய பிடிவாதத்தை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தினால் என்ன நிகழும் என்பதையும் உரு மண்ணுவா அதுமானம் செய்தான். ‘தத்தை தீப்பட்டு இறந்து போனது உண்மையாயின் இவர்கள் பிணத்தைக் காட்ட மறுப்பானேன்? ஒருவேளை இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்குமோ? எனக்கு உயிர் நண்பர்களாகிய இவர்கள் இத்தனை பேர் இங்கிருந்துமா தத்தையை இறந்துபோக விட்டிருப்பார்கள்? இல்லை! இல்லை! ஒரு போதும் இருக்காது. தத்தை இறந்திருக்கமாட்டாள். வேண்டுமென்றே ஏதோ காரணம் பற்றித்தான் இவர்கள் இப்படிக் கூறியிருக்க வேண்டும்’ என்று இந்த விதமாக உதயணன் சந்தேகமுற்று நினைத்து விடுவானானால் பின் மேலே நடக்க வேண்டிய அருமையான திட்டங்கள் அவ்வளவும் சரிந்து போகும். உதயணன் மனம் எவ்வளவு கூர்மையானது என்பதை நன்றாக அறிந்திருந்த உருமண்ணுவா இமைப் பொழுதில் தங்கள் நெருக்கடியை உணர்ந்துகொண்டான். நல்ல வேளையாக வாசவதத்தையின் பள்ளியறைப் பக்கத்தில் முன்பே இரண்டு வேடர்களைத் தத்தை சாங்கியத்தாய் ஆகிய இருவருடைய அணி ஆடைகளுடன் நெருப்பில் தள்ளி வைத்திருந்தனர். ‘இப்பொழுது கரிந்து அடையாளங் கண்டுகொள்ள முடியாமல் இருக்கும் அவர்கள் பிணங்களை அருகில் போக விடாமல் தூரத்திலிருந்தே காட்டி, உதயணனைத் திருப்தி செய்துவிடலாம்’ என்ற முடிவுடன், உதயணனுக்குப் பிணத்தைக் காட்ட ஒப்புக் கொண்டு அவனை அழைத்துச் சென்றான் உருமண்ணுவா. உதயணனோடு தான் அங்கே புறப்படுவதற்கு முன்பாக, உருமண்ணுவா வேறு ஒரு முக்கியமான காட்சியை உதயணன் கண்களிலிருந்து மறைக்க வேண்டியதாயிற்று.