பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

என்று கூறினர் நண்பர். ஆருணி அரசன் இந்த நிலையில் படையெடுத்து வந்தாலும் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் படைகளை நாற்புறமும் திரட்டி முன்னேற்பாடாக வைத்தனர் உதயணன் நண்பர். இவ்வாறு கூறிய அவர்கள் கூற்றும் ஆருணி அரசனைப் பற்றிய எச்சரிக்கையும் உதயணன் சற்றே துயரத்தை மறந்து அரசகுமாரனுக்குரிய வீர விழிப்பையும் துணிவையும் பெறச் செய்திருந்தன. இதைக் கண்ட நண்பர்கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து முதிர்ந்திருந்த சில அமைச்சர்களைக் கொண்டு, காமத்தின் இழிவையும் கேவலம் ஒரு பெண்மகளை இழந்ததற்காக அவன் இவ்வாறு பெருமிதமிழந்து பேதுறுவது தகுதி இல்லை என்பதையும் அவன் மனத்தில் பதியும்படியாக எடுத்துரைக்கச் செய்தனர். சொல்வன்மை தேர்ந்த அவர்கள் அறிவுமொழி, உதயணன் தன் பெருமிதத்தை உணரும்படி செய்தது. நண்பர்கள் வெற்றி பெற்றனர். உதயணன் துணிவு பெற்றான்.

தத்தையின் பொன்னகையிற் புன்னகை கண்டு பிதற்றிய உதயணன், இப்போது தன் ஆண்மையைப் பற்றி உணரத் தொடங்கிவிட்டான். அது நண்பர்க்கு முழு வெற்றியாக வாய்த்தது. வீர விளைவுகள் இனி அவனிடமிருந்து நிகழுமென நண்பர்கள் எதிர்பார்த்தனர். இங்கே இவ்வாறு முதலில் உதயணன் துயர் பொறாமல் உயிர் நீக்கத் துணிந்ததும், பிறகு நண்பராலும் அமைச்சராலும் தேறுதல் பெற்று நலத்துடன் இருப்பதும், மறைவிடத்தில் வசிக்கும் யூகி, தத்தை முதலியோருக்குத் தக்கோர் மூலம் அவ்வப்போது மறைமுகமாக அறிவிக்கப்பட்டன. உடனே யூகி, தத்தை முதலியோரை அழைத்துக்கொண்டு தான் வேறிடத்திற்குச் செல்லக் கருதினான். வாசவதத்தைக்கும் சாங்கியத் தாய்க்கும் நிலைமையை விளக்கி அங்கிருந்து தாங்கள் வேறிடம் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தையும் கூறினான். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். உண்ட அளவில் தோற்றமும் மேனி நிறமும் வேற்றுருவமும் அளிக்கும் மாய மருந்து ஒன்றை யூகி தானும் உண்டு, அவர்களுக்கும் உண்ணக் கொடுத்தான்.