பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாய யானை

13

உதயணனுடைய நாடுகளிற் சிலவற்றையும் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். யூகியின் பிரிவு பிங்கல கடகர்களுக்குப் பெரிதும் துயர் கொடுத்தது.

யூகியின் சூழ்ச்சி வெற்றி பெறுவதற்கான வேலைகள் விரைவாக நிகழ்ந்தன. காளி கோவில் ஊரையொட்டி இருந்ததால் ஏதேனும் ஆபத்து வரலாம் என்று கருதிய யூகி, சற்றுத் தொலைவிலுள்ள பாகம் என்ற சிற்றூரை அடைந்து ஒரு பாழ்வீட்டில் தங்கி, வயந்தகன் முதலிய நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையின் விளைவாகச் சிலர், பல்வேறு மொழிகளைக் கற்று உஞ்சை நகரக் கடை வீதிகளில் வாணிகர்களாக நடித்து ஒற்றறிந்தனர். வயந்தகன் பிரச்சோதனனுடைய குமாரர்களோடு நட்புப் பூண்டு, அவர்களோடு கல்வி கற்று வந்தான். யூகியின் ஆட்களிற் சிலர் ஊமையாகவும், செவிடாகவும் நடித்து அரண்மனையில் வேலை பார்த்து வரலாயினர். இரவு நடுயாமத்தில் வந்து யாவரும் ஒன்று கூடுவார்கள். ஏதாவது ஒரு பாழ்மண்டபம் அல்லது இடிந்துபோன காளி கோயில் அவர்கள் கூடும் இடமாக அமையும். நண்பர்கள் கூடும்போதும் பிரியும் போதும் இரகசியமான சில அடையாளங்களும் சங்கேதங்களும் நடக்கும். அவரவரறிந்தவற்றை அன்றன்று வெளிப்படுத்துவார்கள். அடுத்து நடத்த வேண்டிய திட்டங்கள் உருவாகும். நண்பர் பிரிவர்.

உஞ்சையில் இவர்கள் இங்ஙனம் இருக்குங்கால், பாஞ்சால நாட்டு அரசனாகிய ஆருணி, பிங்கல கடகர்களை வென்று கௌசாம்பியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அஞ்சி ஓடிய பிங்கல கடகர்கள், சில வீரர்களுடன் மறைந்து வாழ்ந்தனர். ஆருணி ஏற்கனவே உதயணனின் பகைவன். அவனது சோர்வை எதிர்பார்த்துக் காத்திருந்தவன். அந்தச் சந்தர்ப்பம் இப்போது வகையாக வாய்த்ததால் பயன்படுத்திக் கொண்டுவிட்டான்.

உஞ்சை நகரத்தில் யூகி, உதயணனைச் சிறை மீட்பதற்காக வேண்டிய ஏற்பாடுகளை மறைமுகமாக நடத்திக்