பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கதையைக் கூறிவந்தாள்: “எங்களுடைய தவப் பள்ளியும் சொந்த ஊரும் இங்கிருந்து வெகு தொலைவிலிருக்கின்றன. நாங்கள் மூவரும் உடன் பிறந்தோர். அவன் (யூகி) என் தம்பி. இவள் (தத்தை) என் தங்கை. எங்கள் தாய் தன் முதுமையை நினைந்து தவவொழுக்கம் மேற்கொண்டு எங்களைப் பிரிந்து சென்றனள். இவளை(தத்தையை) மணந்துகொண்ட கணவன் குமரியில் நீராடச் சென்றிருக்கின்றான்” என்று சாங்கியத் தாய் மற்றவர் சற்றும் ஐயுறாதவாறு இந்தக் கதையைக் கூறி வந்தாள். யூகி அந்தண ஆடவன் உருவிலும், தத்தை இளம் அந்தண நங்கை உருவிலும், சாங்கியத் தாய் சற்று முதிர்ந்த அந்தணி உருவிலும் இருந்ததால் அவள் சொல்லை எல்லாரும் ஏற்று நம்பவும் முடிந்தது.

இதற்குள் யூகி, உருமண்ணுவா முதலியோருக்குத் தங்கள் புதிய இடத்தை அறிவித்திருந்தான். இங்கே அரண்மனையில் உதயணனை நண்பர்கள் தேற்றிவிட்டனர். ஆனால் வாசவதத்தையின் தோழியாகிய காஞ்சனமாலை உதயணனைக் காட்டிலும் அதிகத் துயரில் மீளாமல் ஆழ்ந்து விட்டாள். உதயணனைப் போலத் தத்தை உண்மையாக இறந்துவிட்டாள் என்றே அவளும் நம்பி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். உதயணன் ஆறுதல் அடைந்து விட்டான். இவளை யாராலும் ஆற்ற முடியவில்லை. நெருங்கிப் பழகி நெஞ்சுவிட்டு உறவாடிய பெண் மனம் அல்லவா? அதன் துயர் விரைவில் எப்படி ஆறிவிடும்? ஒரு நாள் அவள் அலறலைச் சகிக்கமுடியாமல், உருமண்ணுவா உண்மையைக் குறிப்பாக அவளுக்கு உரைத்து, யூகி இருக்கும் இடத்திற்கே அழைத்து வந்து அங்கே உயிருடனிருக்கும் தத்தையைக் காட்டிவிட்டான். அப்போது தான் தோழி காஞ்சனமாலையின் துயரம் தணிந்தது. தத்தைக்கு உதவியாக அவளிடமிருக்குமாறு கூறிக் காஞ்சனையை அங்கேயே விட்டுவிட்டு யூகியிடம் விடைபெற்ற பின் உருமண்ணுவா மீண்டும் தலைநகர் திரும்பினான். காஞ்சனை, தத்தை முதலியவர்களோடு தானும் மாறுவேடத்தில் வசிக்கலானாள்.