பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை செய்து கூறவேண்டிய அவசியம் இங்கே ஏற்படவில்லை.

30. மகத யாத்திரை

யூகி முதலிய மூவரும் சண்பை நகரில் இவ்வாறு ஒடுங்கி இருக்கும்போது இப்பால் இலாவாண நகரில் அறிஞர்களும் நண்பர்களும் கூறிய ஆறுதலுரையாலும் அறிவுரையாலும் உதயணன் தனது மனத் துன்பத்தை மறந்திருந்தான். அந்த மறதி அவனுக்குத் தான் பகைவர்களைப் பற்றிய நினைவு தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. தன் பகைவர்களுள் வலிய பகைவனாகிய பாஞ்சால நாட்டு ஆருணியை எண்ணிக் கனன்றது அவன் உள்ளம். ‘எரிந்து கொண்டிருந்த விளக்கு அணையும் நேரம் நோக்கிப் பரவக் காத்துக் கொண்டிருக்கும் இருள்போல, ஏயர் குலத்தின் பலவீனம் நோக்கிப் புகுந்த பகைவனே இந்த ஆருணி, குலப் பகைவனாக விளங்கிவரும் இவன், கோசாம்பி நகரத்தைப் பற்றிக் கொள்ளும் நீங்காத ஆசையுடையவன். என்னுடைய வன்மை மென்மை நிலைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் சூழ்ச்சிபுரியும் கொடிய இயல்பினன். பிரச்சோதன மன்னனின் பெரிய படையையும் சிறிது பொழுது நிலை கலங்கச் செய்தவன். இப்போது தத்தையை உடன்கொணர்ந்த செய்தியையும் பிறவற்றையும் கேள்விப்பட்டு அறிந்திருப்பான். யூகி உயிரோடு இருந்தாலும் ஆருணிக்கு என்மேல் சற்று அச்சமுண்டு. யூகி என்ற பெயரில் அவனுக்கு நடுக்கமும் தளர்ச்சியும் தோன்றும். இப்போது யூகியும் இல்லை என்ற என் தற்போதைய பலவீன நிலையை ஆருணி அறிந்தால் அவனுக்குக் கொண்டாட்டமாகப் போகும்’ என்று இங்ஙனம் பலவாறு எண்ணி மனங்குமைந்து கொண்டிருந்த உதயணன், உடற் சோர்வும் உள்ளச் சோர்வும் தீர அமைதியை நாடி மலர்ச் சோலைப் பக்கமாக உலாவுவதற்குச் செல்லலானான். அளவு கடந்த துன்பப் பொறையினால் மனமானது ஆழ்த்தப்படும் போது, அதிலிருந்து மீள்வதற்காக அமைதியை நாடுவது அதனியற்கை.