பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகத யாத்திரை

151

உதயணனின் இத்தகைய மன நிலையை அமைச்சர்களும் வரவேற்று எதிர்பார்த்தே இருந்தனர். தகுந்த ஒற்றர்கள் மூலம், பாஞ்சால அரசனான ஆருணியின் அப்போதைய உட்கருத்தைம் உணர்ந்திருந்தனர். ‘யூகியோ இறந்து போனான். ஏற்கெனவே உதயணன் பலவிதத் துயரங்களாலும் நலிவடைந்துள்ளான். இனி எனக்கு எந்தவிதமான பகையும் இருக்க முடியாது’ என்று கருதி ஏற்பாடு செய்திருந்த கோட்டைக் காவல் முறைகளையும் நீக்கிவிட்டு மகிழ்ச்சியோடு இருந்தான் ஆருணி யரசன். இவற்றையும் பிற சூழ் நிலைகளையும் நன்கு அறிந்திருந்த உதயணனுடைய தோழர்களும் அமைச்சர்களும் ஏற்ற செவ்வி நோக்கி உதயணனுக்கு இவற்றை விவரித்துக் கூறக்காத்திருந்தனர். சமயமும் வாய்த்தது. “ஆருணி தன்னை எதிர்ப்பாரில்லை என்ற செருக்குடன் இருக்கிறான். இந்நிலையில் நாமே தனியாக அவனை வெற்றி கொள்வது என்பதும் இயலாத செயலே. எனவே, மகத நாட்டரசன் தொடர்பை இப்போது நாம் பெற்றுக் கொள்வது அவசியம். மகதவேந்தன் படைப் பலம் மிக்கவன். நாடுபெற வழியின்றி மறைந்து திரியும் நின் தம்பியர்களாகிய பிங்கல கடகர் துணையையும் நாம் இதற்கு எதிர்பார்க்கலாம். ஒடுங்கி நின்று, பின்வலிமை தோன்ற முன் வந்து போரிடும் ஆட்டுக்கிடாய்போல நாம் ஆருணியைத் தாக்கவேண்டும். புதிதாகப் பிடித்து வந்த யானையைப் பணி செய்யப் பழக்கும் பாகர்போல இந்தச் சூழ்ச்சித் திட்டத்தில் துணிவும் அச்சமும் நமக்கு ஒரு வரையறைக்கு உட்பட்டு இருக்கவேண்டும். சூழத் துயரமே கண்டு நிற்கும் நாம், மேலும் இவ்வாறே வீணாக இருப்பது தகாது. அன்றியும் இந்நிலை, பகைவர் பெருமிதத்தை மேலும் மேலும் வளர்த்து வருவதற்கு ஏதுவாகும்” என்று நண்பரும் அமைச்சரும் உதயணனுக்குக் கூறினர். படையெடுக்கவும் தூண்டினர்.

ஆனால், சோர்ந்த நிலையிலிருந்த உதயணன் அப்போது கூறிய விடை அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அந்த விடையால் உதயணன் மனத்தில் விரக்தியுணர்வு எவ்வளவு