பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஆழமாகப் படிந்து விட்டிருக்கிறது என்பதையே அவர்கள் அறிய முடந்தது. வெள்ளம் ஒடியபின், சூனிய அமைதியுடன் காணும் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் காட்டாறு போல இருந்தது உதயணனுடைய அப்போதை உள்ளத்தின் நிலை.

“வெள்ளத்தில் ஆழ்ந்து அழிய இருக்கும்போது உதவும் அரும்புணைபோல எனக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் உதவி, அதனால் தான் வருத்தமுற நேரிட்டாலும் வருந்தாத உயிர் நண்பன் யூகி இப்போது இல்லை. தாமரை மலரின் உள்ளிதழ் போலச் சிறந்தவளும் அவ்விதழ் போலச் செவ்வரி, கருவரி பரந்த நயனங்களை யுடையவளுமாகிய காதல் மனைவி வாசவதத்தையும் இப்போது இல்லை. முன் எப்பொழுதோ ஒருமுறை மனமிரங்கிச் செய்த உதவியை நினைந்து என்மேல் நன்றி மறவாமல் எனக்கு வேண்டும் போதெல்லாம் உதவிய சாங்கியத் தாயும் தத்தையோடு தீப்பட்டு இறந்து போனாள். இம் மூவரையும் இழந்த நான் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களையுமே இழந்தவன்போல ஆகின்றேன். இனி நான் அரசாட்சி பூண்டு வாழ்தலினும் இறந்து போதலே சிறந்தது” என்று இவ்வாறு விரக்தி யுணர்ச்சியில் உதயணனுடைய மறுமொழிகள் ஆக்கமின்றியும் ஆர்வமின்றியும் வெளிப்பட்டன. ஆறுதல் மொழிகளால் அடக்க முயன்றும் அடங்காத உதயணனிடம் துன்பங்கண்ட நண்பர், பழைய வரலாறு ஒன்றைக் கூறி அதனாலும் அவனைத் தேற்ற முற்பட்டனர்.

“பல கலைகளிலும் முற்றித் துறைபோகிய ‘இலாமயன்’ என்னும் முனிவர் காள வனத்தில் தமது ஆசிரமத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். அந்தக் காள வனத்தில் தீப்பற்றியபோது தவ ஆற்றல் மிகுந்த அவருடைய ஆசிரமம் கூட எரிந்து அழிந்துபோனது. ஆதலால் எத்தகையோர்க்கும் துன்பம் நேர்தல் இயற்கையே. அதற்காக ஊக்கமிழந்து தளர்ச்சி அடைதல் கூடாது” என்று கூறி முடித்தனர் நண்பர்.