பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராசகிரிய நகரம்

155

வந்தான். ஆண்மான் காவல் செய்யக் குட்டிகளைத் தழுவிக் கொண்டு திரியும் பெண்மானைக் கண்டு தவித்து, தத்தையின் விழிகளை நினைவு கூருவான். உடனே அப்பெண் மானை நோக்கித் “தத்தை சென்ற உலகை நீ அறிவாயோ? அறிந்தால் எனக்கும் கூறு; யானும் அங்கே செல்வேன்” என்பான்.

“அழகிய தோகை விரித்தாடும் ஆண்மயில்கள் பக்கத்தே இருக்க, நடைபழகிக் கற்கும் மயிற் பேடைகளே இறந்து போன தத்தை எங்கே? அவள் எவ்வாறு மாறிப் பிறப்பு எய்தியிருக்கிறாள்? இதை நீங்கள் ஆராய்ந்து கூறினால் உங்களுக்குக் குற்றமும் உண்டோ?” என்று மயில்களை நோக்கிக் கேட்பான். வெண் சிறகுகளையும், சிவந்த சிறுகால்களையும், நுண்ணிய புள்ளிகளையும் உடைய அழகிய ஆண் புறாக்களைக் கண்டு, “தத்தை இருக்கும் இடத்தைச் சொன்னால் நான் எனது ஆசை தீர அங்கே செல்வேன். சொல்ல வில்லையானால் உங்கள் பேடையுடன் சேரப்பெறாத துன்பத்தை நீங்களும் அடைவீர்களாக!” என்று கூறுவான். “தத்தை இருக்கும் இடத்தை அறிந்தால். மலர்கள் பொருந்திய அவள் கூந்தலில் உங்களுக்குத் தேன் விருந்து கிடைக்கும். எனக்கும் இன்ப விருந்து கிடைக்கும். நீங்கள் அதைச் செய்தால் அது எனக்குக் கைமாறு நிகராகாத பேருதவியாக அமையும்!” என்று வண்டுகளைப் பார்த்து இரங்கிக் கூறுவான். “முகிற் கணங்கள் தழுவி விளையாடும் பொதிகை மலையில் பிறந்து நறுமண மலர்களை மலரச் செய்து உலா தொடங்கும் தென்றலே! நீ என் மேனியைத் தீண்டிச் சென்ற இதே உணர்ச்சியுடன் தத்தை உள்ள இடத்தை நாடிச் சென்று அவள் பொன்மேனியையும் தீண்டுவாயாயின் அது நின் பெருந்தகைமையைக் காட்டும்” என்று வீசும் தென்றற் காற்றை விளித்துப் பேசுவான்.

இவ்வாறே மகதநாடு செல்லும் வழியில் அங்கங்கே கண்ட தோற்றங்களால் துயர் நிறைந்த சித்தப் பிரமை யடைந்து மேற்கண்டவாறு பேசாதவற்றோடு எல்லாம்