பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கொண்டிருந்தான். உதயணனைச் சிறையிற்போய்ச் சந்திப்பதற்காக யூகி ஒரு நாடகத்தைத் துணிந்து நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. தலையில் நீர்க்கரகம், நோயுற்றவன் போன்ற தோற்றம், தெய்வ அருள் பெற்றவன் போன்ற பேச்சு, பித்தனின் கோலம் ஆகியவற்றோடு ஆடிப் பாடிக் கொண்டு நகர வீதிகளின் வழியே சென்றான் யூகி. "வானுலகிலிருந்து தேவன் ஒருவன் இந் நகருக்கு வந்துள்ளான். அவனைப் பின்தொடர்ந்து வந்த தொண்டன் யான். இவ்வூரரசன் ஐந்தலை நாகமொன்றைச் சிறை செய்திருக்கிறான். எங்கே அந்தச் சிறை?" என்று பலவகையாகப் பிதற்றிக் கொண்டு பல மக்கள் தன்னைச் சூழ்ந்துவர உதயணன் இருந்த சிறையை யூகி அணுகினான். உதயணன் தன்னை அறிந்து கொள்வதற்காக அவனும் தானும் மட்டும் அறிந்த ஒரு பாட்டை யூகி பாட, யூகி வந்துள்ளான் என உதயணன் உய்த்துணர்ந்து, ஒரு புல்லாங்குழலை ஊதித் தான் அந்தச் சிறையில் இருப்பதை யூகிக்கு அறிவித்துவிட்டு, வேடிக்கை பார்ப்பவன் போல் சிறைக்காவலரை ஏமாற்றிவிட்டு வெளியே வந்தான். நண்பர்கள் சந்தித்தனர். குறிப்பால் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். நேரமிகுவது ஆபத்து என்பதை அறிந்த யூகி, உதயணனிடம் விடை பெற்று ஒரு பயங்கரப் பேயைப் போல நடித்து, யாவரையும் அஞ்ச வைத்துத் தன் இருப்பிடம் சென்றான்.

உதயணனும் யூகியும் குறிப்பால் ஏதேதோ பேசிக் கொள்வதை நுட்பமாகக் கவனித்த சிறைக்காவலன் ஒருவனுக்குச் சந்தேகம் தோன்றியது. அவன் தன் சந்தேகத்தை அரசனிடம் தெரிவித்தான். அப்போது அரசனுக்கு அருகில் இருந்த சாலங்காயன், "ஒருவேளை வந்தவன் யூகியாக இருக்கலாம். யூகியின் மார்பில் யானைக்கொம்பு குத்தியவடு ஒன்றுண்டு. அதைக்கொண்டு உண்மையை அறியவேண்டும்" என்றான். பிரச்சோதனன் அதை அறியவேண்டிய ஏற்பாடுகள் செய்தான். ஆனால், அரண்மனையில் நடந்த இந்த நிகழ்ச்சியையும் சாலங்காயனுடைய சந்தேகத்தையும்