பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வசத்தாலோ என்னவோ? இம்முனிவர் நமக்குக் கிடைத்தார். நிச்சயமாக இவர் தத்தையை உயிருடன் அளிப்பார் போலத் தெரிகிறது” என்றனர். இவ்வாறு கூறி ஆறுதலை வலுப்படுத்தினர். நண்பர்கள் திட்டம் உதயணனை ஏற்றபடி தேற்றி எவ்வாறேனும் மகத நாட்டின் கோநகரில் இன்னும் பல நாள் தங்கச்செய்து அதன் மூலமாக மகத நாட்டுப் பேரரசனாகிய தருசகனுக்கு மிகவும் வேண்டிய உறவினனாக்கி விடுதல் வேண்டும் என்பதே. இதற்காகவே உதயணனை அவன் போக்கில் செல்லவிட்டுச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிப் புற நகரில் ஒதுக்கமான பகுதியாகிய அத் தவப் பள்ளியில் அவர்கள் வசித்து வரலாயினர்.

32. பதுமாபதி வருகை

தயணன் முதலியோர் இவ்வாறு இராசகிரிய நகரத்தில் இருந்து வருகையில் இராசகிரிய நகரத்தார் காமதேவனுக்கு விழாக் கொண்டாடும் நன்னாள் வந்தது. காமன் கோவிலில் நடைபெறும் இந்த விழா ஏழு நாள்கள் தொடர்ந்து நிகழும். இராசகிரிய நகரத்துத் தெருக்கள் தோறும் புதுமணல் பரப்பிக் கைவன்மை மிக்க ஓவியர் தீட்டிய விழாக் கொடிகளை ஏற்றினர் நகர மாந்தர். விழாவுக்குரிய மகிழ்ச்சியும் களிப்பும் நகரின் எல்லாப் பகுதிகளிலும் தொடங்கியது. மகத அரசன் தருசகனுடைய தங்கை பதுமாபதி கன்னிப்பருவத்தின் கட்டழகு மிக்க தோற்றம் படைத்தவள். ஒரு பெரிய மகா காவியத்தின் தலைவிக்கு உரிதாகக் கவிகள் புனைந்து பேசும் எல்லாவித வனப்புக்களும் பொருந்திய எழில் செல்வியாக விளங்குபவள். நாட்டியம், இசை முதலாகிய பல கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள். சுற்றிச் சுற்றி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிராமல் ஒரு படியாகச் செல்வ மும் கல்வியும் மிக்க அவளுடைய அழகை உவமை கூறப் புகுந்தால் அதற்கு அதுவேதான் நிகர். நகரில் இந்தத் காமன் திருவிழா நடக்கும் ஏழு நாள்களும் காமதேவன் கோட்டத்