பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமாபதி வருகை

161

திற்குச் சென்று வழிபாடுகள் செய்துவிட்டுத் திரும்புவது பதுமாபதியின் வழக்கம். இந்த ஆண்டிலும் காமன் விழாவில் பதுமாபதி காமன் கோட்டத்திற்கு வரப்போவதைத் தெரிவிப்பதற்காக முரசறையும் வள்ளுவ முதுமகன் அதை நகரத்தார்க்கு உரைத்துச் சென்றான்.

ஆயமகளிரும் தாயத்தாரும் புடைசூழ முதல் நாள் விழாவிற்குக் காமன் வழிபாடு செய்யப் புறப்பட்டாள் பதுமாபதி. தெய்வவழிபாட்டிற்குச் செல்லுகின்றாள். ஆகையால் சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பெற்றுத் தேவகன்னிகைபோல அவள் தோன்றினாள். பாண்டில் வையம் என்னும் வகையைச் சேர்ந்த வண்டிகள் அவள் புறப்படும் வாகனங்களாக இருந்தன. பந்து, பாவை, கழங்கு, சிறு கலசங்கள், பூஞ்செப்புக்கள் முதலிய வழிபாட்டுப் பொருள்களை ஏந்திக் குற்றேவல் மகளிர் உடன் செல்வதற்குக் காத்திருந்தனர். பதுமாபதி அவள் செல்வதற்கென அழகு செய்யப்பட்டு நின்ற வையத்தில் ஏறிக்கொண்டாள். சேவகர்கள் பலர் காவலாகத் தொடர வண்டி புறப்பட்டது. பதுமாபதிக்குத் துணையாக அவளிருந்த வண்டியில் செவிலித்தாயும் உடன் அமர்ந்து கொண்டாள். பிறர் தமக்கு ஏற்ற வாகனங்களில் உடன் வந்தனர். பணிப் பெண்கள் பல வகைப் பொருள்களைச் சுமந்துகொண்டு நடந்து வந்தனர். பதுமாபதி ஏறியிருக்கும் வண்டியின் பாகன் ஆண்மகனாயிருத்தலைக் கண்ட அவளுடைய தோழியாகிய அயிராபதி, அவனைக் கீழிறக்கிவிட்டுத் தானே கோலேந்திப் பாகன் வேலையைச் செய்வாளாயினள். “வண்டி செல்லும் வீதிகளில் அப்போது எதிரே குதிரை, யானை முதலிய விலங்குகளை எவரும் ஒட்டி வருதல் கூடாது” என வீரர் அரசனுடைய ஆணையைத் தெரிவித்தனர். விரைவில் காமன் கோட்டத்தை அடைந்தது பதுமாபதியின் வண்டி. கோவிலில் முன்னேற் பாடாகக் கூட்டம் விலக்கப்பட்டிருந்ததனால் அமைதி நிலவியது. பதுமாபதி இறங்கிக் கோவில் வாயிலிற் புகுந்து உள்ளே சென்றாள்.