பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அப்படிப் பதுமாபதி வண்டியிலிருந்து இறங்கும்போது ஓர் அற்புதம் நடந்தது. சித்திர வையத்தை மேற்பார்வை செய்யும் பணியாளன் கோவில் வந்துவிட்டதைக் கண்டு வண்டியை நிறுத்தச் செய்தான். காமன் கோட்டத்திற்குள் இருந்து தாபதப் பள்ளிக்குச் செல்லும் சோலை வழியிலுள்ள ஒரு புன்னை மரத்திற்குப் பக்கத்தில் வண்டி நின்றது. வாசவதத்தையின் நினைவால் மனங்கலங்கி உதயணன் அந்த மரத்தடியில் தன்னை மறந்து, சுற்றுப்புறத்தை மறந்து பித்தன் போல நின்று கொண்டிருந்தான். பதுமாபதி வண்டியிலிருந்து இறங்கும் வழி அவனுக்கு நேர் எதிரே இருந்தது. வெண் முகில் போன்று ஒரு மெல்லிய வெண்பட்டுத் திரைச் சீலை வண்டியின் இறங்கும் வழியை மறைத்து இடப்பட்டிருந்தது. பதுமை இறங்குவதற்கு இருந்தாள். உடனிருந்தவள் திரைச் சீலையை விலக்கிப் பதுமைக்கு வழிவிடுவதற்கு முன்பு தற்செயலாகக் காற்று கொஞ்சம் பலமாக அடித்தது. திரைச்சீலை தானாக விலகிற்று.

புன்னை மரத்தடியில் தன்னை மறந்து நின்ற உதயணனின் கையில், பக்கத்திலுள்ள மாதவிக் கொடி ஒன்றிலிருந்து கிள்ளிய தளிர்க் கொத்து ஒன்று இருந்தது. அப்போது காவலர்கள் அக்கம் பக்கத்திலிருந்தவர்களை விலகிச் செல்லுமாறு குரல் கொடுத்தனர். அக் குரல் உதயணன் காதிலும் விழுந்தது. ‘நேற்று வரை பிறர் இவ்வாறு விலகிச் செல்ல, நான் அரசமரியாதைகளுடன் போதல் வருதல் பெற்றேன். இன்றோ , மற்றவர் வரவிற்காக விலக்கப்படுகிறவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். சக்கரம் கீழ் மேலாகச் சுற்றுவதுபோல் மனித வாழ்வும் இவ்வாறு தான் ஆக்கமும், கேடும் மாறிமாறி வருவது போலும்’ என்று தன் மனத்தில் நினைத்துக்கொண்டே உதயணன் அங்கிருந்து விலகிச் செல்லப் புறப்பட்டான். இப்படி அவன் புறப்படுவதற்காகத் திரும்பிய அதே நேரத்தில்தான். அவன் பார்வைக்கு நேரே இருந்த வண்டியின் திரைச்சீலை விலகிற்று. உதயணன் பார்வை வண்டிக்குள் விழுந்தது. அதிலிருந்த, பெண்ணைப்