பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமாபதி வருகை

163

பார்த்ததும் வாசவதத்தையே உயிரோடு வண்டிக்குள் அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது உதயணனுக்கு. ஒருவேளை காகதுண்டகன் எனும் விசித்திர முனிவன் விரைவிலேயே தன் மந்திர வலிமையால் தத்தையை உயிர்ப்பித்து அனுப்பி விட்டானோ? என்று எண்ணி, வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் உதயணன். அவனுடைய கால்கள் அவளை நோக்கி விரையத் துடித்தன.

தத்தையின் நினைவிலே ஆழ்ந்திருந்த அவனுக்குப் பதுமாபதியே இப்படித் தத்தையாக மாறி உருவிலும் நிறத்திலும் வேற்றுமையின்றித் தோன்றியது வியப்புக்குரியதன்று. இப்படி இமையாமல் மலர்ந்த வண்ணமே நோக்கும் உதயணனுடைய நெடுங்கண்களில், கண்டவரைக் கவரும் ஒரு விதமான அழகு இருந்தது, அந்த அழகு பதுமாபதியை மயக்கம் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இல்லை யென்றால் அவள் வண்டியிலிருந்து இறங்க வேண்டியதையும் மறந்து, பதிலுக்கு அவனை அப்படிக் கண்களால் பருகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே! கரை கடந்து வந்த ஒன்றுபடும் இரண்டு மகா சமுத்திரங்களின் சங்கமம்போல் இருந்தது இவர்கள் காமன் கோட்டத்திலே சந்தித்த சந்திப்பு.

‘என் நெஞ்சத்து நிறையை அளந்து பார்ப்பதற்காகக் காமன் என்ற தேவனே இவ்வாறு புன்னை மரத்தடியில் தோன்றி என்னைச் சோதிக்கின்றானோ! அதற்காகத்தான் இப்படி அந்தண இளைஞன்போல் மாறி உருக்கொண்டானோ? என்று எண்ணி மனம் கட்டழிந்து மயங்கினாள் பதுமை. அவள் நெஞ்சில் புகுந்து நிலைத்தான் அவன். மெல்ல மெல்ல தன் சூழ்நிலையை உணர்ந்த பதுமை இந்த உலகிற்கு வந்தாள். “மேல் நடக்க வேண்டியவற்றைக் கவனியுங்கள்” என்று தன் கட்டளை விளங்கும்படியாக ஆயத்தைச் சேர்ந்த பணி மகளிர்களை நீண்ட விழிகளால் ஒருமுறை நோக்கினாள் பதுமை. பின்பு வண்டியிலிருந்து இறங்கிக் கோவிலை வலஞ் செய்யப் புறப்பட்டாள். அவளிடம்