பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இப்போது எவ்வளவோ மாறுபாடுகள் தெரிந்தன. நளினமான காதல் மயக்கம் அவளைக் கட்டுப்படுத்தி யிருந்தது. அன்னங்கள் நாணமடையும் படியான நடையுடன் பதுமை தோழியரோடு கோவிலை வலஞ்செய்யும் அழகை உதயணன் தொலைவில் நின்று கண் இமையாமல் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான். ‘வனப்பு என்னும் தெய்வீக வடிவமோ இது!’ என்று அவன் எண்ணினான்.

கோவிலை வலஞ் செய்து முடிந்தவுடன் பதுமை வழக்கப்படி அந்தணர்க்குரிய பலவகைத் தானங்களைச் செய்ய ஆரம்பித்தாள். முதிய அந்தணர் பலர் விருப்பமுடன் அழைக்கப்பட்டுத் தானங்கள் செய்யப் பெற்றனர். அன்று முதல்நாள் விழாவாகையால் தானங்களைச் சிறப்பாகச் செய்தாள் பதுமை. அப்போது ஆயத்தைச் சேர்ந்த நடுத்தரப் பருவத்தினளான மங்கை ஒருத்தி, பதுமையின் பெருமைகளை இனிய பாடலாக இசையுடன் பாட ஆரம்பித்தாள். அவள் பாடிய புகழுரைப் பாடல்களில் பதுமாபதியின் அழகு மற்ற சிறப்பியல்புகள் ஆகியவற்றைப் பாராட்டியும், அவளுக்குக் கணவனாதற்குரியவன் வத்தவ நாட்டரசன் உதயணனைப் போன்ற தகுதி வாய்ந்தவனாக இருக்க வேண்டுமென்றும் கருத்துக்கள் அமைந்திருந்தன. உதயணன் காலத்தில் அவன் அழகுக்கு நிகரற்ற ஆதர்சபுருஷனாக விளங்கினமையால் கன்னி மகளிர் எவரை யார் வாழ்த்தினாலும் இப்படிக் கூறி வாழ்த்துவது வழக்கமாக இருந்தது. அங்கு நின்ற உதயணன் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டான். அவ்வளவில் முதல் நாள் வழிபாடு நிறைவேறியது. பதுமாபதி முதலியோர் காமன் கோவிலிருந்து அரண்மனை திரும்பினர். பதுமை வண்டியிலேறியபோது தன்னுள்ளம் அங்கு உதயணனிடம் நிற்க, தான் மட்டும் புறப்பட்டுப் போனாள்.

‘சூரியன் மறைவதற்குள் அரண்மனை சென்றுவிட வேண்டும்’ என்று உடன் வந்தோர் அவசரப்படுத்தியதன் காரணமாகத்தான் பதுமாபதி அவ்வளவு விரைவில் புறப்பட