பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நளின நினைவுகள்

165

நேர்ந்தது. ‘இவள் தத்தையைப் போலிருக்கிறாளே? உறுதியாகத் தத்தைதான் என்று துணியவும் முடிவதில்லையே’ என்றெண்ணி மயக்கத்தோடு நின்றுகொண்டிருந்த உதயணன், கடைசியாக வண்டியைப் பின்பற்றிப் போகும் ‘அயிராபதி’ என்னும் தோழியை வினாவக் கருதிச் சென்றான். “இந்நங்கை யார்? உனக்கு வேறு அவசரமான காரியங்கள் இருப்பினும் இதற்கு நீ என்பால் அன்பு கூர்ந்து அவசியம் மறுமொழி கூறிவிட்டுச் செல்” என்று அவளை வினவினான் உதயணன்.

33. நளின நினைவுகள்

ன்னை நோக்கிப் ‘பதுமாபதி யார்?’ என்று இராசகிரிய நகரத்தில் இருந்துகொண்டே வினாவிய அந்தண இளைஞனுக்குரிய புனைகோலத்தை அயிராபதி ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்தாள். அவ்வாறு பார்த்தபின், ‘யாரோ ஓர் அந்தண இளைஞன் தானம் பெறும் வேட்கையால் வந்திருக்கிறான் போலும்’ என்று மனத்திற்குள் கருதியவாறே அவனுக்கு மறுமொழி கூறலானாள்: “இவள் இந் நகரத்து அரசன் தருசகனுடைய தங்கை, காசியரசன் புதல்வி. தருசகனின் சிற்றன்னையாகிய உதையையோடை என்பவள் இவளுடைய தாய். இவளுக்கு இதுகாறும் திருமணம் ஆக வில்லை. இப்போது காமன் திருவிழாவாகிய வசந்த விழாக் காலமாகையினால் ஏழு நாளும் இவள் இங்கே வழிபாடு செய்வதற்கு வந்து போவாள். விழா முடியும் இறுதி நாளன்று இவள் கையால் அந்தணர்களுக்கு மிகுந்த தானங்களைச் செய்வாள். நீயும் இருந்து உனக்கு வேண்டிய தானங்களைப் பெற்றுச் செல்வாயாக” என்று கூறி முடித்தாள் அயிராபதி. வண்டியில் வந்தவள் தத்தை அல்ல என்று உதயணன் மயக்கம் தெளிந்தான். உதயணனுக்கு மேற்கண்டவாறு மறு மொழி கூறிய அயிராபதி என்ன நினைத்துக் கொண்டாளோ, திரும்பிச் செல்லப் புறப்பட்டவள் உதயணனை நோக்கி, “உங்களைப் பார்த்தால் இந்த நாட்டைச் சேர்ந்தவர் போலத் தெரியவில்லையே! நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?