பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

எவ்வூரினர்? உங்கள் பெயர் யாது? யான் இவற்றை அறிந்து கொள்ளலாமோ?” என்று ஐயத்தோடு கேட்டாள்,

இந்தக் கேள்விகளால் உதயணன் விழித்துக்கொண்டான். ஒரு நொடியில் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவளுக்குக் கூறவேண்டிய விடையையும் கற்பனை செய்து விட்டான், “யான் காந்தார நாட்டைச் சேர்ந்த இரத்தினபுரி என்னும் ஊரினன், அவ்வூரிலுள்ள சாண்டியன் என்னும் அந்தண வேதியர் புதல்வன். என் பெயர் மாணகன் என்பது. இந் நாட்டிலுள்ள எழில்வளங் காணும் ஆசையால் இங்கு வந்தேன்” என்று அவன் கூறிய விடையைக் கேட்டுத் திருப்தியடைந்த அயிராபதி, “நல்லது, நான் வருகிறேன்” என்று கூறி அவனிடம் விடைபெற்றுச் சென்றாள். மாலை நேரம் கழித்துச் சுற்றி இருள்படர ஆரம்பித்தது. கதிரவன் மேல் வானின் செம்மை வெளியில் மூழ்கிக் கொண்டிருந்தான், இங்கே உதயணன் மனம் பதுமையிடம் சென்று இருந்து கொண்டு அவளிடமிருந்து வர மறுத்தது. அவன் அவளைப் பற்றி எண்ணித் தாப நினைவுகளால் வாடித் தவித்தான்.

மரத்தின் உயர்ந்த கிளையில் தான் நிற்க ஒரு கொம்பை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டிருந்தவன், பிடி நழுவிக் கீழே விழும் நிலை ஏற்பட்டால், வேறு எந்தக் கொம்பு அவசரத்தில் கைக்கு அகப்படுகிறதோ அதை முன்னிலும் அழுத்தமான ஆசையோடு இறுகப் பற்றிக் கொள்வான். தத்தையும் ஆகியும் மறைந்த துன்பங்களைப் பதுமையைக் கண்ட போதிலிருந்து உதயணன் மறந்துவிட்டான். அவள் தத்தை அல்லள், பதுமாபதி’ என்று அயிராபதி கூற அறிந்து கொண்ட பின்னும் உதயணன் மனம் அவளை விட்டுப்பிரிய மறுத்தது. பதுமையின் தெய்வீக வனப்பே இதற்குக் காரணம் எனலாம், இந்தக் காதல் மயக்கத்துடனே அந்தி இருள் சூழத் தொடங்கிய நேரத்தில், காமன் கோட்டத்திலிருந்து தவப் பள்ளிக்குப் புறப்பட்டான் அவன்.

‘ஆடவர் பொருள் தேடிப் பிரியும்போது, அந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல் மனைப் பெண்டிர்