பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நளின நினைவுகள்

167

கடமை. வினை காரணமாகவோ, பொருட்குறைபாடு காரணமாகவோ பிரிவதற்கு எல்லை இது என்றெல்லாம் மகளிர்க்குக் கூறுவதுபோலச் சோலையில் அப்போது முல்லை அரும்புகள் முறுக்கவிழ்ந்தன. இரவலர்க்கும் அறிஞர்க்கும் பொருள் வழங்காது மறுத்துக் கண் கவிழ்ந்து கதவடைக்கும் மன்னர் போலப் பொய்கையில் தாமரைகள் கூம்பின. முகமலர்ந்து பிறர்க்கும் அளித்துத் தாமும் உண்டு மகிழ்வோர்போல மலர்ந்த மல்லிகைப் பூக்களில் வண்டுகள் விரும்பி நாட்டம் கொண்டன. இப்படிப்பட்ட அழகிய மாலைக் காட்சிகளையும் செந்நிறத்தில் விரித்த பட்டுப் பெருங்கம்பளம்போலத் தோன்றும் மேல் வானப்பரப்பையும் கண்டு மனம் இன்ப வேதனையில் ஆழ, உதயணன் தவப்பள்ளிக்குச் சென்றான். பதுமை தனக்குக் கழுநீர்மாலை கொடுப்பதுபோல ஒரு காட்சியும் அவனுடைய கனவு வெளியில் தோன்றியது. வெண்மேகக் கற்றைகளுக்கு நடுவே மதிமுகம் ஒளிரத் திகழும் வானவ மகளிர்போல வெண்பட்டுத் திரை காற்றில் விலக, அங்கே காட்சியளித்த பதுமையின் தோற்றத்தை மீண்டும் மானசீகமாகக் கண்முன் கொணர முயன்றான் உதயணன். வெங்கனலில் வீழ்ந்த வெண்ணெய்த் திரள்போலக் கலங்கிப் பேதுற்றது அவன் நெஞ்சம். பதுமாபதி அவன் நினைவுகளாகவும், நினைவு களின் இலட்சியமாகவும் இருந்தாள்.

மாலை நேரம் அவனுடைய வாட்டத்தை வளர்த்தது. உதயணனின் நிலை இவ்வாறிருக்க அங்கே இராசகிரிய நகரத்து அரண்மனையில் பதுமாபதியின் நிலையும் காதல் வேதனை சூழவே இருந்தது. புன்னை மரத்தடியில் மாதவிக் கொடியினைக் கையில் ஏந்தி நின்ற உதயணன் தோற்றம் அவள் கண்களை விட்டு அகலவே இல்லை. அவன் தன்னைத் தழுவிக் கொள்வதாகவும் பேசி மகிழ்வதாகவும் அவளுடைய கனவுவெளியில் காட்சிகள் தோன்றித் தோன்றி இன்பமுறச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறாகக் காதல் நோக்கத்தோடு ஒருவரை ஒருவர் கண்ட பின்பு இருவரும்