பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தை புகுந்த செல்வன்

171

யின் கண்களைக் கண்டதும்தான் இங்கே மீண்டன. விண்டு சொல்லவோ, மறைக்கவோ முடியாத நிலையில், “அயிராபதி, அதோ அந்தப் புன்னை மரத்தடியில் நிற்கிறானே ஓர் அந்தண இளைஞன் அவனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமோ? அவன் யார்?” என்று தோழியை விளித்துக் கேட்டு வைத்தாள். பதுமையின் சமத்காரமான இந்தக் கேள்விக்கு அயிராபதியும் பதில் கூறினாள்... “நேற்று நாம் இங்கே வந்து விழா வழிபாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்டோம் அல்லவா? அப்போது நான் சற்றுப் பின்தங்கிப் புறப்படும்படி நேர்ந்தது. நான் இங்கிருந்து புறப்படும்போது இவன், இந்த மரத்தடியிலிருந்து என் பக்கமாக வந்தான். நான் பரிவுடன் இவனை விசாரித்தேன். இவன் தன் பெயர் மாணகன் என்றும் தன் தோழர்களோடு மகத நாட்டின் அழகைக் கண்டு போக வந்ததாகவும் என்னிடம் சொன்னான். நீ விழா இறுதி நாளில் செய்யும் தானத்தை அடைவதற்காக இவனும், இவன் தோழர்களும் இன்னும் இங்கே தங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது!” என்று பதுமையிடம் கூறத் தக்கனவற்றை மட்டும் சுருக்கமாகக் கூறினாள் அயிராபதி. இதைக் கேட்டபின் தன் சிந்தை குடி புகுந்த செல்வன் இன்னான் என்பதைப் பதுமை தெரிந்து கொண்டாள்.

அவளுக்கு இப்போது வேறு ஒர் ஆசை தோன்றி யிருந்தது. அதுதான் உதயணன் கையிலுள்ள பூம்பந்தை எவ்வகையிலேனும் பெற வேண்டும் என்ற ஆசை. “அவன் கையிலிருக்கும் பூம்பந்தை நீ பார்த்தாயோ அயிராபதி! பந்து புனைவதில் அவனுக்கு நல்ல தேர்ச்சி இருக்கும்போல் அல்லவா தோன்றுகிறது! குறிப்பினால் மற்றவர்கள் அறியாதபடி அந்தப் பந்தை நீ எனக்கு வாங்கிக் கொடேன்!” என்ற குழைவோடு கூடிய வேண்டுகோளைப் பதுமை அயிராபதியிடம் வெளியிடவும், அயிராபதி அவளுடைய அந்த ஆசையை நிறைவேற்ற ஒப்புக் கொண்டாள். பதுமையின் மனம் மகிழ்ந்தது.

பதுமையிடம் அவள் கூறியவாறே பந்தை வாங்கி அளிப்பதாக ஒப்புக் கொண்ட அயிராபதி மண்டபத்தி