பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தை புகுந்த செல்வன்

173

அவ்வளவு எளிதில் நெகிழவிட்டு விடுபவர்கள் இல்லை! அவர்கள் நெஞ்சு எதற்கும் கலங்காத நிறை உடையது. பெண்களின் நிறை ஒழுக்கநெறி தவறாமல் இருப்பதற்கு, மகத வேந்தன் தருசகன் தன் ஆணைகளை எவ்வளவோ வன்மையாக வைத்திருக்கிறான். அதோ வழிபாடு செய்ய வந்திருக்கின்றாளே அந்தக் கன்னி பதுமாபதி, அவளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. நெஞ்சழுத்தமும் நிறை வரம்பும் கொண்டவள் அவள். அவளுடைய தோற்றமே இதை வற்புறுத்துவதாக அமைந்திருக்கிறது. மனம் போன போக்கிற் செல்பவள் இல்லை அவள். ‘தத்தை தீப்பட்ட துயரும் பிறிவும் பொறாமல், உதயணன் அந்தண வேடங்கொண்டு இங்கே வந்திருக்கிறான்’ என்று எவராயினும் அறிந்தவர்கள் அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்! அல்லது, ‘இவர்களைப் பார்த்தால் தானம் பெறக் காத்திருக்கும் அந்தணர் போலத் தெரியவில்லையே? ஏதோ உயர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் போன்ற எடுப்பான தோற்றமும் ஒளியும் இவர்களிடம் காணப்படுகின்றனவே’ என்று அவளாகவே சந்தேகங் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரணம் பற்றியே அவள் உன்னை ஆர்வமுடன் கவனித்திருக்க வேண்டும். வேறு எந்தக் காரணத்தாலும், அவள் நெஞ்சு உன்னிடம் நெகிழ்வதென்பது இயலாது. ஒருவேளை நீ கூறுவதுபோல அவள் உன்னைக் காதலித்தாலும் அது முற்கூறிய சந்தேக உணர்ச்சியுடன்கூட நிகழ்வதாகவே இருக்கும். எனவே, மாறு வேடங்கொண்டு வேற்றுநாடு வந்திருக்கும் நமக்கு, இதனால் துன்பம் வரினும் வரலாம். ஆகவே இந்த விஷயத்தில் நீ கொஞ்சம் ஒடுங்கி இருப்பதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.” இசைச்சன் செய்த இந்த நீண்ட சொற்பொழிவு உதயணனுக்கு வேதனையையும் வெறுப்பையும் கொடுத்தாலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். நோக்கில் மட்டும் முன்போலவே இன்னும் கடுமை இருந்தது.