பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. கண்கள் பேசின

தயணன் நளகிரியை அடக்கி அதன்மேல் ஏறிக் கொண்டு தன்னைப் பார்க்க விரும்பிய பிரச்சோதனனைக் காண வந்தான். பிரச்சோதனன் உதயணன் வரவிற்காகப் புலிமுக மாடத்தில் தேவியரோடு காத்திருந்தான். அப்போது அரசிளங்குமரியாகிய வாசவதத்தையும் அங்கு இருந்தாள். யானைமேல் வந்த உதயணனை மாடத்திலிருந்து இறங்கி வந்து பிரச்சோதனன் வரவேற்றான். உதயணனும் பகைமை பாராட்டாமல் வெளிப்படையாக அவன் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நன்றி செலுத்தினான். பிரச்சோதனன் மனத்தில் உதயனனைப் பற்றி முன்பு இருந்த தவறான எண்ணம் மாறியது. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் அன்பும் இரக்கமும் குடிகொண்டன. "நளகிரியின் திடீர் மதத்திற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?" என்று பிரச்சோதனன் வினவினான். உதயணன் அக் காரணத்தை யானை மருத்துவ நூல் முறைப்படி விரிவாக விளக்கிக் கூறினான். பிறகு பேச்சு வேறு விதமாகத் திரும்பியது. உதயணன் சமயம், கலை முதலியவைகளைப் பற்றிப் பிரச்சோதனனுக்கு ஒரு பெரிய விரிவுரையை நடத்த வேண்டி இருந்தது. உதயணனுடைய விரிவுரையைக் கேட்ட அவந்திவேந்தன் மனத்துள் அவன் பருவ இளமையையும் அறிவின் முதிர்ச்சியையும் நிறுத்துப் பார்த்து மகிழ்ந்தான். உதயணன் திறமையைக் கண்டு வியந்தவன், தன் புதல்வர்களுக்கு உதயணனை வணங்கி அவனுக்குக் குற்றேவல் செய்து அவன்பாலுள்ள கலைகளைக் கற்குமாறு ஆணையிட்டான். பிரச்சோதனனுடைய கண்கள் உதயணனைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது உதயணன் வேறு கண்கள் இரண்டின்பால் தன் கண்களைத் தூது போக்கிக் கொண்டிருந்தான். பிரச்சோதனன் யானையை அடக்கியது பற்றியும் மதத்தின் காரணம் பற்றியும் கேட்ட போது தற்செயலாக நிமிர்ந்த உதயணன், முன்பே தன் கண்களைப் புலிமுக மாடத்திலிருந்து இரண்டு கயல்விழிகள் ஆராய்வதைக் கண்டு கொண்டான். அப்போது இரண்டு