பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

குறிப்பாக விடை பெற்றுக்கொண்டு சித்திர வையமேறி அரண்மனை சென்றாள் பதுமை. அப்போது மாலை நேரமாகியிருந்தது. அன்றிரவு உதயணன் நன்றாக உறங்கினான். பதுமாபதியிடம் தான் பூண்ட காதலுரிமை உண்மையானது என்பதை நண்பர்களுக்கு நிரூபித்துவிட்ட திருப்தியோடு உறங்கினான். அந்த அமைதியான உறக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். கனவில் வாசவதத்தை அவன் முன்பு தோன்றினாள். பின்னலிட்டுப் படியாது மாசுற்றுப் பரந்த தலையும், இளைத்த நோயுடம்பும், வற்றிப் போய் எலும்பு தெரியும் முதுகுமாக இருந்தது அவளுடைய பொலிவில்லாத அந்தத் தோற்றம்.

உதயணன் கனவில் அவளைக் கண்டு ஆச்சரியத்தால் சூழப்பட்டான். மகிழ்ச்சியோடு வாசவதத்தையை வரவேற்றான். “வாசவதத்தாய், குற்றமற்ற கற்பின் செல்வி என் துன்பம் இனித் தீர்ந்தது. நீ வந்துவிட்டாய்” என்று கனவில் வாய்விட்டு அரற்றினான். வாசவதத்தை, உதயணன் இவ்வாறு கூறியவற்றைச் செவியுற்று மெல்ல வாய்திறந்து பேசனாலாள். உதயணன் அவள் பேசுவதைக் கவனமாகக் கேட்டான். “என்னைப் பிரிந்து வேற்று நாட்டிற்கு வந்திருக்கிறீர்கள். இப்போதோ என்னைக் கண்டவுடன் மிகவும் அன்பாகப் பேசுவதுபோலப் பேசுகிறீர்கள் எதற்கு இந்த வீண் பேச்சு” என்று அவன் பக்கம் நெருங்காமல் அகன்று நின்று கூறினாள் தத்தை. அது கேட்ட உதயணன் மனம் மயங்கி, “இறந்து போன உன்னை உயிரோடு மீட்டுத் தருபவர் இந்நகரத்தில் உள்ளார் என்று கேள்விப்பட்டே நெடுந்தொலைவைக் கடந்து இங்கே வந்தேன்! இதற்காக நீ சினங் கொள்ளாதே” என்று அவளை நெருங்கி இருந்து ஊடல் தணிக்க முற்பட்டான். இதைக் கேட்ட தத்தை மேலும் சினங்கொண்டவள்போல, “இன்று நீங்கள் இந் நாட்டரசன் தருசகன் தங்கையாகிய பதுமாபதியின் மேல் காதல் கொண்டீர்கள். அவளுக்குக் கொடுக்கவென மாலையுங் கட்டி வைத்தீர். அவள் கொடுத்த மோதிரத்தையும் மாலையையும்