பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நண்பர்கள் நயமாக எடுத்துச் சொன்னவற்றை உதயணன் ஒப்புக் கொள்ளவில்லை. பதுமையின்மேல் அவனுக்கிருந்த மோகத்தை அவ்வளவு சுலபமாக நண்பர்களால் நீக்கிவிட முடியவில்லை. உதயணன் நண்பர்களின் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.

‘இவன் வத்தவ நாட்டுப் பேரரசன் உதயணன் என்று மகத வேந்தன் தருசகனுக்கு அறிமுகம் செய்து வைக்கவே இங்கே உதயணனை அழைத்து வந்தோம். இப்போதோ இயற்கையாகவோ அந்த அறிமுகத்தை நாம் தவிர்த்தாலும், தவிராமல் தானாக ஏற்பட்டே தீரும் போலிருக்கிறது. இப்போது ஊழ்வினையும் ஏயர்குலத்தின் முன்னேற்றத்திற்கே உதவி செய்கிறது. உதயணன், பதுமை காதலால் நாம் எதிர்பார்த்து வந்த மகதநாட்டு அரசனின் உறவு கிட்டினால் நமக்கு அதுவே சிறந்த பலன் ஆகும் என்று எண்ணி நண்பரும் மனநிறைவு பெற்றனர். உதயணனும் பதுமாபதியின் காதலைப் பொறுத்தவரையில் தன் எண்ணத்தைச் சற்றேனும் தளர்த்திக் கொடுக்காமலே இருந்தான்.

‘உதயணன்-பதுமாபதி காதல் உறுதியான மெய்யே’ என்று அறிந்த நண்பர், ‘இனி எவ்வாறேனும் தங்களுக்கு மகத வேந்தனுடைய தொடர்பு கிட்டிவிடும்’ என்று மன நிறைவோடு இருந்தனர். ஆனால். உதயணன் நினைவில் மட்டும் பதுமாபதியின் காதல் ஒன்றே ஓங்கி நின்றது. அவளைப் பற்றியும் அவளுடைய அழகைப் பற்றியும் நினைத்த அளவு, மகத வேந்தனுடனே தனக்கு ஏற்பட வேண்டிய நட்பைப் பற்றி உதயணன் எண்ணவேயில்லை. எவ்வகையில் ஆயினும் பதுமையை மீண்டும் தனிமையில் சந்திக்க வேண்டுமென்ற அடக்க முடியாத ஆசை அவன் மனத்தில் எழுந்தது. தன் மேல் அவளுக்குள்ள காதலின் மிகுதியை ஏற்கெனவே அறிந்து உறுதி செய்து கொண்டதும், இந்த ஆர்வம் இன்னும் தவிர்க்க இயலாதபடி எழுந்ததற்கு ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம். இந்த ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிதுடித்த அவன்