பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஒளிந்து கொள்வதற்காக நுழைந்தபோது, வயது முதிர்ந்த இரவலன் ஒருவனைப்போல மாறுவேடங்கொண்டிருந்தான். மாறுவேடத்திற்கு உள்ளே அவனுடைய இயற்கையான இளமைக் கோலம் இருந்தது. உதயணனது இந்தச் செய்கையை ஒப்புக் கொள்ளாமல் கருத்து வேறுபட்டதனால் தன் நண்பர்களிடம் அன்று மீண்டும் உதயணன் அதைப் பற்றிக் கூறவில்லை. அவர்களும் அதில் தலையிடவில்லை. அந்தி சாய்கின்ற நேரம். காமன்கோட்டத்துச் சோலையில் ஏற்கெனவே வெயில் நுழையாது. இப்போது அங்கே நன்கு இருள் பரவியிருந்தது. பதுமை ஆயத்துப் பெண்களும் காவலர்களும் புடைசூழ வழிபடுவதற்கு வந்திருந்தாள். ஒலிகளினால் வெளியே பதுமையின் சித்திரவையம் வந்து விட்டதை அறிந்த உதயணன், இன்னும் நன்றாக மறைவில் ஒளிந்து கொண்டான்.

மாறுவேடத்திற்குரிய உடைகளை உள்ளே வந்தவுடன் களைந்துவிட்டு, முதன் முதலாகப் பதுமையைச் சந்தித்த அதே இயற்கையான தோற்றத்தோடு இப்போது இருந்தான். அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கோவிலுக்குள் இருந்து வெளியே பரவிக் கொண்டிருந்த அகில், மலர் முதலியவற்றின் மணம் போலவே அவன் நெஞ்சின் நினைவு மலர்கள் காதல் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. ஆயிற்று! இன்னும் சிறிது நேரத்தில் பதுமை எப்படியும் அங்கே வழிபடுவதற்காகத் தனியே வருவாள். அப்போது மலரின் விரிவு நோக்கிக் காத்திருக்கும் வண்டின் நிலையில் அவன் இருந்தான். தோட்டத்தின் வாயிலில் யாரோ நடந்து வரும் சிலம்புகளின் கிண்கிணி நாதம் அவன் காதுகளில் யாழொலி போலக் கேட்டது. கலின் கலின் என்ற அந்தச் சிலம்போசை வரவர அவனை அவள் நெருங்குவதாகச் சொல்லியது. உதயணனுக்கு உடல் முழுதும் வேர்த்துவிட்டது. பதுமை நெருங்கி வந்தாள். உடன் வந்திருந்த காவலர்கள் வெளியிலேயே அங்கங்கே மரத்தடியில் களைப்பாற அமர்ந்துவிட்டனர். ஆயத்துப் பெண்களும்