பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருளில் நிகழ்ந்த சந்திப்பு

185

காமன் கோட்டத்தின் வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தார்கள். எனவே, பதுமை தான் மட்டும் தனியே வழிபாடு செய்ய நினைந்து கோட்டத்தினுள் நுழைந்திருந்தாள்.

மணவறை மாடத்தின் எதிரே வந்ததும், திடுமென்று அவள் எதிரே, ‘காமதேவனே அந்த இளைஞன் வடிவமாக வந்திருக்கிறானோ என்று எண்ணும்படி உதயணன் இருளிலிருந்து வெளிப்பட்டு நின்றான். ஒரு நொடி, பதுமை திடுக்கிட்டு நடுங்கிக் கூக்குரலிட வாயைத் திறந்துவிட்டாள். சற்றைக்கெல்லாம் அந்த முகத்தை உற்றுப் பார்த்த பின்னர், எதிரே நிற்பவன் தன் உள்ளங் கொள்ளை கொண்ட கள்வன்தான் என்பதைப் பதுமை புரிந்துகொண்டாள். கூக்குரல் இடுவதற்கு மேலெழுந்த நாவு ஒடுங்கியது. பயத்தால் நடுங்கிய உடலில் நாணம் பரவியது. பதுமை தலைகுனிந்தாள். அவள் இதழ்களிலே புன்னகை மென்மலர் பூத்தது. கன்னங்களிலே செம்மை படர்ந்தது. விழிகள் குறுகுறுத்தன. அவள் மாதவிக்கொடிபோலத் துவண்டாள். உதயணன் கரங்கள் கொடியைத் தழுவும் கொழுகொழும்பு போல அவளைத் தழுவின.

உதயணனுடைய அந்தக் கைகள் அவளைத் தழுவிய போது, யாரோ தன்மேல் கூடை கூடையாக அன்றலர்ந்த மல்லிகை மலர்களைக் கொட்டுவதுபோன்ற உணர்ச்சி பதுமைக்கு ஏற்பட்டது. அவள் தன்னை மறந்தாள். உதயணன் வசப்பட்டது அவளுடைய உணர்வு. அலர்ந்த மலரும் ஆவல் நிறைந்த வண்டும் ஒன்றுபட்டது போலாயிற்று அவர்கள் நிலை. எவ்வளவு நேரம் அவர்கள் அதே நிலையில் இருந்தார்களோ? தோழியர்கள் உள்ளம் பதைத்து, உள்ளே சென்ற பதுமையைக் காணவில்லையே! என்று கோட்டத்திற்குள் புகுந்துவரும் ஒலி கேட்டு, உதயணன் இருளில் மறைந்து கொண்டான். பதுமை தன் நிலையை உணர்ந்து கொண்டவளாய், அப்போதுதான் வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே வருபவள்போல அவர்கள் முன்னே தோன்றினாள். மலர்களும் மாலைகளும் அப்படியே