பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரண்மனைத் தொடர்பு

187

கோட்டத்திற்குள்ளேயே அவன் பதுமையைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது.

தவப் பள்ளியில் இருந்துகொண்டு அவன் இவ்வாறு பலமுறை காமன் கோட்டத்திற்கு வந்து செல்வது பிறர் கண்ணில் பட்டால் அவனையும் நண்பர்களையும் அதுவே காட்டிக் கொடுத்துவிடும் என்பதை அவன் தெளிவாக அறிவான். உடனடியாக அவனுக்கு இந்த எண்ணம் தோன்றுவதற்குக் காரணமே அதுதான். அடுத்தநாள் போது விடிந்ததும் வழக்கப்படி செய்யவேண்டிய காலைக் கடன்களை முடித்துக் கொண்டபின், உதயணன் புதியதொரு மாறுவேடத்தோடு இராசகிரிய நகரத்து அரண்மனைக்குப் புறப்பட்டான். மகத அரசன் தருசகனைப் பற்றி நன்கு பழகி அறிந்து கொண்டிருந்த அரண்மனைக் காவலன் ஒருவனை முதலில் உதயணன் சந்தித்தான். அந்தக் காவலனோடு ஏதேதோ பல செய்திகளைச் சுற்றி வளைத்துப் பேசிக்கொண்டே வரும்போது, ‘அரசனுக்கு மிகவும் விருப்பமான தொழில் எது?’ என்றும் ஒரு கேள்வியையும் இடையே அவனிடம் கேட்டு வைத்தான். அரண்மனைப் பெருவாயிலின் ஒருபுறத்தே நின்று அவர்கள் இப்படி உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேசுவதில் விருப்பம்மிக்க அந்தக் காவலனைத் தன்னுடைய சிறிது நேரப் பழக்கத்தினாலேயே நன்றாகக் கவர்ந்து விட்டான் உதயணன். உதயணனிடம் அவனுக்கு விலக்க முடியாத ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. உதயணன் கேள்விக்கு அந்தக் காவலன் அன்போடும் ஆர்வத்தோடும் விடை சொல்லலானான். “எங்கள் அரசனின் தந்தை தம் ஆட்சிக் காலத்தில் பொன்னும் மணியும் முத்தும் அடங்கிய மதிப்பிட முடியாத செல்வத் தொகுதி ஒன்றை இவ் வரண்மனையின் ஒரு பகுதியில் புதைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் எங்கள் அரசன் புதையலாக இருக்கும் தம்முடைய தந்தையின் அந்த நிதியை இதுவரை பெற முடியவில்லை. அப் புதையலின் இருப்பிடம் இதுவரை தெரியவில்லை என்பதே அதற்குக் காரணம்! எனவே, புதையல் இருக்குமிடத்தை அறிந்து கூறு