பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்கள் பேசின

17

பேருடைய கண்கள் சூழ்நிலையை மறந்து தமக்குள் ஏதோ பேசின. ஒன்றையொன்று ஊடுருவி நோக்கும் அந்த நான்கு கண்களிலும் காதல் களித்து விளையாடியது. தென்கடலில் இட்டகழி ஒன்று, வடகடலில் இட்ட நுகம் ஒன்றின் துளை ஒன்றில் பொருந்தினாற்போல, வெகுதொலைவில் உள்ள இரண்டு நாடுகளைச் சேர்ந்த இருவரை ஊழ் வினையாகிய விதி ஒன்று சேர்த்தது. ஒன்று சேர்க்க வேண்டிய பொறுப்பைத் தன் தலையில் ஏற்றுக்கொண்டு திரியும் விதி ஏமாற்றமடைய விரும்பவில்லை. சிறைக் கைதியாக உதயணனை உச்சயினிக்கு அனுப்பிய விதி, யானையை அடக்கியதால் அரசனின் நண்பனாகச் செய்து வாசவதத்தையோடு சேர்க்கவும் திட்டமிட்டிருந்தது போலும்! வெஞ்சுடர்க் கதிரவனும், தண் கதிர் மதியும் ஒன்றுகூடிக் கடற்பரப்பின் மேற்சந்தித்தாற்போலப் புலிமுக மாடத்தில் ஆயத்தார்களுக் கிடையே நின்ற வாசவதத்தையும், கீழே யானையின் மேலே எழிலே உருவாக வீற்றிருந்த உதயணனும் கண்களே வாய்களாகக் கடந்த பிறவியிற் பிரிந்துபோய் மீண்டும் சந்தித்தாற்போலப் பேசினர். காதலுலகத்தில் பேச்சே பெரும்பாலும் கண்களில் தானே ஆரம்பமாகிறது? அதுதான் இங்கேயும் நடந்தது.

நூலும் பஞ்சும் போலப் பிரிக்க முடியாத உறுதி வாய்ந்தது என்று கூறும்படி அமைந்தது தத்தை உதயணன் காதல். நூழிற்கொடி ஒன்றோடொன்று முறுக்குண்டு இணைந்து கிடப்பதுபோல ஒன்றுபட்டது அவர்கள் அன்பு. தேனும் பாலும் விளைக்கும் தீஞ்சுவையினும் சிறந்த ஒன்று அந்தக் காதலின் சுவையே. குலமும் குணமும் கூடிய, அன்பும் இனமும் பிறவும் இசைந்து பொருந்தி இணைந்த ஒன்றாகும் அவ்விருவர் தொடர்பு. இத்தகைய தொடர்பு இயற்கையாக அமைவது அருமையினும் அருமை.

இறுதியில் சூழ்நிலையை உணர்ந்து சமாளித்துக் கொண்ட உதயணன், தத்தையின்பாலிருந்து கண்களை வாங்கிக்கொண்டு அரசன் கேட்ட கேள்விக்கு விடை கூறினான். மன்னனோ, ஆயத்தார்களோ இந்தக் காதல்

வெ.மு- 2