பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரண்மனைத் தொடர்பு

189

கூறுதல் ஆகிய அருங்கலைகளில் தேர்ந்த கலைஞன் ஒருவன் நம் அரண்மனை வாசலில் வந்து காத்திருக்கிறான்” என்று கூறினான். தருசகவேந்தன். காவலன் கூறுவதைக் கவனமாகக் கேட்டான். “கலைஞர்களைக் காண்பதும் அளவளாவுவதும் கொடுத்து வைத்த பெரும்பேறுகள் அல்லவா? நீ கூறிய அந்தக் கலைஞர் திலகத்தை உடனே போய் இங்கழைத்து வா!” என்று அரசனின் கட்டளையைப் பெற்றுக்கொண்டு காவலன் வாயிலுக்குத் திரும்பினான். அரசன் தருசகனின் அழைப்பைக் காவலன், உதயணனிடம் கூறி, அவனை உள்ளே அழைத்துச் சென்றான். உதயணனும் மாறு வேடத்திற்கு ஏற்ற நடிப்புடனே அவனைப் பின்பற்றினான். உள்ளே நுழைந்ததும் தருசகன் அவனை அன்போடு வரவேற்று ஒர் ஆசனத்தில் இருக்கச் செய்தான். பின்பு அவன் படித்திருக்கும் கலைகள் எவை எவை என்பதைப் பற்றியும் சில வினாக்களைக் கேட்டான். உண்மையாகவே தான் புதையல், நிலத்து மறைபொருள்கள் முதலியவற்றைக் காணும் கலைஞன்தான் என்று அந்த அரசன் அப்போதே நம்பும்படியாக அவனுக்கு விடை கூறினான் உதயணன்.

கடைசியில் தன் தந்தை புதைத்து வைத்து விட்டுச் சென்ற அரும்பெரும் புதையலைத் தேடி இருக்குமிடம் அறியாமல் தான் துன்புற்று வருவதையும், அதுவரை வந்த எந்தக் கலைஞரும் அது இருக்கும் இடத்தைப் பற்றிச் சரியாகக் கூற முடியவில்லை என்பதையும் உதயணனிடம் தருசகன் கூறினான். மேலும், “தங்களால் அப் புதையல் இருக்கும் இடம் கண்டு பிடிக்கப் பெறுமாயின் யான் பெரிதும் மகிழ்ச்சியுறுவேன். உங்கள் திறமை இதில் எப்படியும் வெற்றி பெறும் என்றே நம்புகிறேன். இந்த உதவியை நீங்கள் எனக்குச் செய்தே தீர வேண்டும்” என்று அவன் வேண்டிக் கொண்டபோது, புதையல் எடுப்பதைப் பற்றிய அவனது எண்ணங்கள் எவ்வளவு பரபரப்பாக இருக்கின்றன என்பதை உதயணன் தெரிந்து கொண்டான். புதிய வேடம், புதிய துன்பத்தை வலுவில் கொணர்ந்திருப்பது