பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

முதலிய மற்ற நண்பர்கள் விரைவில் அறிந்துகொண்டனர். ‘அரண்மனையில் ஏதாயினும் பிழை நேர்ந்து, மாறுவேடத்தி லுள்ள உதயணன் யார் என்று வெளிப்படையாகிவிட்டால், அவனுக்குப் பல தீமைகள் நேருமே’ என்று நண்பர்கள் சிந்தித்தனர். முடிவில் தாங்களும் அவன் இருக்கும் இடத்திலேயே அவனுக்குத் துணையாக இருப்பது நல்லது என்ற திட்டத்துடன் தருசகனின் அரண்மனையில் மாறுவேடத்தோடு வேலை தேடிப் போயினர். முதலில் உருமண்ணுவா நல்ல வேலையொன்றில் அமர்ந்தான். உதயணன் தன் கவனத்திலிருந்து விலகிவிடாதபடி அவனால் பார்த்துக் கொள்ள முடிந்தது. இசைச்சனும் வயந்தகனும் சமய நூல்களிலும் தரும நூல்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்களைப்போல நடித்துப் பதுமையின் தாய்க்கு அறநூல்களைப் போதிக்கும் ஆசிரியர்களாக வேலை பெற்று அரண்மனைக்கு வந்தனர். மற்ற வீரர்களிற் சிலர் பதுமைக்கு விதவிதமான மலர் மாலைகளைக் கட்டிக் கொடுக்கும் பணியில் அமர்ந்தனர். இவ்வாறே உதயணனைப்போல அவனோடு வந்த யாவரும் அரண்மனையில் தொடர்பு கொண்டுவிட்ட னர். உதயணன் செல்லும் வழியில் அவனுக்குத் துன்பம் நேராமல் சுற்றியிருந்து காப்பது அவர்கள் கடமை அல்லவா? அந்தக் கடமை யுணர்ச்சிதான் அவர்களையும் அரண்மனையில் தொடர்பு கொள்ளத் தூண்டியது.

மாறுவேடத்தோடு கூடிய நண்பர்களும் அரண்மனைக் கலைஞர்களும் எந்நேரமும் தன்னைச் சூழ இருப்பதை உதயணனும் அறிவான். ஆனாலும் அவர்களில் எவரும் அறியமுடியாதபடி காமன் கோட்டத்திற்குச் சென்று வருவதை மட்டும் அவன் நிறுத்த வில்லை. அதே பழைய மணவறை மாடத்தில் பதுமையும் அவனும் தொடர்ந்து தனிமையிலே சந்தித்து வந்தனர். அவர்களுடைய சந்திப்புக்களின் எண்ணிக்கையைப் போலவே காதலும் வளர்ந்து பெருகி வந்தது. ஆனால் இவ்வாறு சந்திக்கும் சந்திப்பில் உதயணனுக்கு இருந்ததைவிடப் பதுமைக்கு மிகுதியான துன்பங்கள் இருந்தன. நாள்தோறும் மாலையில் காமன்