பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கொண்டிருந்தான். இந்த இரண்டு வேற்று வடிவங்களையும் மேற்கொண்டு இரண்டு இடங்களிலேயும் தான் உதயணன் என்பது தெரிந்துவிடாதபடி அவன் தன்னைப் பாதுகாத்துக் கொண்டுவந்தான். குறிப்பிட்ட நாளன்று பதுமை, பகலிலேயே காமன் கோட்டத்திற்குப் புறப்பட்டு விட்டாள். தோழிப் பெண்களும், வயது முதிர்ந்த காவலர்களும், தானப் பொருள்களையும் வழிபாட்டுப் பொருள்களையும் ஏந்தி வரும் ஏமல்மகளிரும் உடன் வந்தனர். அவள் ஏற்பாட்டின் படி திரைச்சிலை போர்த்த மூடுபல்லக்கு ஒன்றும் உடன் கொண்டு வரப்பட்டது. காமன் கோட்டத்தை அடைந்ததும் முன் ஏற்பாடாக அந்தப் பல்லக்கை மணவறை மாடத்தின் அருகிலே வைக்குமாறு அதனைத் தூக்கி வந்தவர்களுக்குப் பதுமை கட்டளை யிட்டாள். அவள் சொல்லியபடியே புதுப்பட்டுத்திரை மின்னும் அந்தச் சிவிகை மணவறைக்குப் பக்கத்தில் இறக்கி வைக்கப்பட்டது.

தான் மாடத்தினுள்ளே தனிமையில் விரதம் இருந்து வழிபடப் போவதாகக் கூறி, உடன் வந்த தோழிகளை அங்கங்கே பிரித்து ஒதுக்கிவிட்டுப் பதுமை மாடத்தில் நுழைந்தாள். பழைய இடத்திலேயே உதயணன் மறைந்திருந்தான். பதுமை புன்னகையோடு அவன் முன்னே தோன்றினாள். புன்னகையைப் பதில் புன்னகையாலே வரவேற்றான் உதயணன். அன்றைய பகல்பொழுது அவர்களுக்கு அந்த மாடத்தினுள்ளே கழிந்தது. நேரம் போனதே தெரியவில்லை. காதல் விளையாட்டுக்களிலும் பேச்சிலுமாக மாலைப் பொழுதுவரை கழிந்துவிட்டது. கன்னிமாடத்திற்குப் புறப்பட்டுச் செல்லவேண்டிய நேரம் ஆகி விட்டதைப் பதுமை உணர்ந்தாள். வெளியே அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் இருந்த சிவிகையை உதயணன் பார்த்து வைத்துக் கொண்டான். அவள் கூற வேண்டியவற்றை எல்லாம் குறிப்பாற் கூறினாள். யாவும் கேட்டுக்கொண்டு உதயணன் தலையசைத்தவாறே குறும்புச் சிரிப்பு ஒன்று இதழ்களில் தோன்ற நடந்து சென்றான்.