பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கன்னி மாடத்தில் உதயணன்

195

அவன் சிரிக்கும் அழகைக் கண்களால் பருகிக் கொண்டே பதுமை வெளியே சென்றாள். தானங்கள் வழங்குவதாகக் கூறிய செய்தியை மெய்யாக்கிக் காட்டவேண்டிய நாடகம் எஞ்சி இருந்தது. அதுவும் முடிந்துவிட்டால் திட்டம் வெற்றி பெற்றது போலத்தான். பின்பு மூடுபல்லக்கில் காதலனோடு அரண்மனைக்குப் புறப்படுவதற்கு எதுவும் தடையில்லை. பதுமை கோட்டத்தில் இருந்து வெளிப்பட்டு வாயிலை அடையவும், அங்கே காத்திருந்த ஏவல் மகளிர் தானமாக வேண்டிய பொருள்களை வரிசையாகத் தூக்கிக் கொண்டு அவளருகில் வந்து நின்றனர். காவலர்கள் சங்கு முதலிய வாத்தியங்களை முழக்கித் தானம் தொடங்கி விட்டதை அறிவித்து இரவலர்களை அழைத்தனர். ஆடை வகைகளையும், பொன், மணி, முத்து இவைகளால் ஆகிய அணிகலன்களையும் பலவித உணவுப் பொருள்களையும் வருவோர்க்கு எல்லாம் தன் கையாலேயே பதுமை வரையாது வழங்கினாள். வந்திருந்த இரவலர்கள் யாவரும், தத்தமக்கு வேண்டுவனவற்றை வேண்டிய அளவு விருப்பத்தோடு பெற்றுச் சென்றனர்.

அவ்வளவில் மாலை முடிந்து எங்கும் இருள் பரவிற்று. காமன் கோட்டத்தில் இருந்த எல்லா மணி விளக்குகளும் ஏற்றப்பட்டன. பதுமை கோவிலின் உள்ளே இருந்த மணி விளக்கைத் தன் கையாலேயே ஏற்றிவிட்டுப் புறப்படத் தொடங்கினாள். கூட்டமாகப் பதுமையை நெருங்கி வந்த பெண்களை, அவள் தோழி யாப்பியாயினி என்பவள், “எம் அரசி இன்று உண்ணா நோன்பு இருந்து களைப்புற்றிருக்கிறாள். இப்படிக் கூட்டம்கூடி நெருக்கினால் நல்ல காற்றும் அவளுக்குப்படாது” என்று குறிப்பறிந்து கூறி விலக்கினாள். அப்போது முதிய பெண்கள் சிலர், மங்கல வாழ்த்துப் பாடினர். யாப்பியாயினியின் உதவியால் பதுமை தனிமை பெற்றாள். விரைவாக உள்ளே நுழைந்து, உதயணனை மூடு சிவிகையில் ஏற்றிவிட்டுத் தானும் அதே சிவிகையில் ஏறிக் கொண்டாள். குறிப்பாக எல்லாம் தெரிந்து கொண்டிருந்த