பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் சினம்

201

களும் அத்தகைய குப்பைக் கோழி போன்றவர்கள்தாம் போலும்! அதை இன்று கண் கூடாகவே இங்கே நான் கண்டு விட்டேன்” என்று கைகளை அழுத்தி நெரித்துக் கொண்டே சினத் துடிப்புடனே நிறுத்தி நிறுத்திக் கூறினாள் பதுமை. அவள் தன்னிடம் சினமும் ஊடலும் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்று இப்போது உதயணனுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. தன்மேல் அவளுக்கு ஏற்பட்ட ஊடலோடு கூடிய அந்தச் சினத்தால், அணிகலன்களைக் கழற்றித் தரையிலே சிதறியும் கூந்தலை அவிழ்த்துக் கொண்டும் அவள் தோன்றிய அந்தச் சினத் தோற்றத்திலும் உதயணன் தனிபட்டதோர் அழகைக் கண்டான்.

அவளது சினத்தை எப்படியாவது தீர்க்கக் கருதிய அவன் அருகில் நெருங்கித் தான் வேண்டுமென்றே இப்படி இருக்கவில்லை என்றும் கவனக் குறைவாக இருந்துவிட்டதாகவும் இனிய மொழிகளில் இரங்கிக் கூறினான். அவளது அவிழ்ந்த தலையைக் கோதியும், சிதறிக் கிடந்த அணிகலன்களை எடுத்துக் கொடுத்தும், பல இங்கிதமான சொற்களைப் பேசியும் ஊடலைத் தணிக்க உதயணன் செய்த முயற்சிகள் யாவும் வீணாயின. அவனை அருகில் நெருங்கவிடாமல் தள்ளினாள் சினந்தணியாத பதுமை. அப்போது எதிர்பாராத துணை ஒன்று இயற்கையாகவே உதயணனுக்குக் கிடைத்தது. மாடத்தின் கீழிருந்த சோலை மரங்களில் இருந்து கூகை யொன்று திடீரென்று பறந்து வந்து மாடத்தில் அவர்கள் கட்டிலருகில் உள்ள திரிசூலத்தின்மேல் உட்கார்ந்துகொண்டு பலமான குரலில் பயங்கரமாக ஒருமுறை கத்தியது. அந்தக் குரலைச் செவியுற்ற பதுமை திடுக்கிட்டு நடுக்கத்தோடு திரும்பியபோது கோட்டானின் நெருப்புக் கண்கள் பயங்கரமாக இருளில் மின்னின. பதுமை பயந்துபோய் உடனே உதயணனைத் தழுவிக் கொண்டாள். இதனால் அவள் சினமும் ஊடலும் தீர்ந்து போயின. சமயத்தில் வந்து தனக்கு உதவி செய்த கூகையை வாழ்த்திக்கொண்டே பதுமையை ஊடல் தணியச் செய்தான் உதயணன்.